லெப்.கேணல் சாந்தகுமாரி/ஜெயசுதா அக்கா



எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன.

புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் இருந்த காலப்பகுதியது. எதிரியானவன் எமது மண்ணை வல்வளைக்கும் நோக்குடன் ஜெயசிக்குறு, ரணகோச, வோட்டஜெற் என பெயரிட்டபடி படை நடவடிக்கைகளை மாறி மாறி மேற்கொண்டு எமது வளங்களை அழிவுக்குள்ளாக்கியதுடன், எம்மக்களையும் பெரிதும் துன்பப்படுத்திக் கொண்டிருந்தான். எவரும் எதிர்பாராத பெரு வெள்ளமாக ஓயாத அலைகள்-03 சுழன்றடித்தது.

இம் மாபெரும் நிலமீட்பு நடவடிக்கையின் போது ஒட்டுசுட்டான், மாங்குளம் பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதிகளை மீட்கும் பொறுப்பு மாலதி படையணிக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கையில் மாலதி படையணியின் ஒரு அணியே பங்கு கொண்டது. இன்னொரு அணி அம்பகாமப்பகுதி முன்னணிக் காப்பரண்களில் நிலைகொண்டிருந்தது. ஏனையவை வேறு வேறு இடங்களில். அம்பகாமத்தில் நிலைகொண்டிருந்த அணியின் பொறுப்பாளர்களில் ஒருவர் லெப்.கேணல் சாந்தகுமாரி ஆவார். மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாலதி படையணியை அதன் சிறப்புத் தளபதி பிரிகேடியர் யாழினி (விதுசா) அவர்கள் நெறிப்படுத்திக் கொண்டிருந்தார்.

சண்டைச் சத்தங்களைக் கேட்டுக்கொண்டு இவரால் சும்மா இருக்க முடியவில்லை. தொலைத்தொடர்புக் கருவியின் ஒலியலை வாங்கியை இழுத்துவிட்டு சண்டைக் கட்டளைகளை கேட்டபடி அங்கும் இங்கும் நடப்பதாயும் இருப்பதாயும் பின் எழும்புவதாயும் இருந்தார். சண்டை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் துடித்தபடி இருந்தார். சண்டை கடுமையாய் நடந்து கொண்டிருந்தது. இவருக்கு முன்னே உள்ள எதிரிக் காப்பரண்களின் முதுகுப்புறம் சண்டை நடந்து கொண்டிருக்க, இவர் தன்னை மறந்து தன் சிறப்புத் தளபதிக்கும் தெரியப்படுத்தாமல் சண்டை நடக்கும் பகுதிக்குச் சென்று, தானும் சண்டையில் கலந்து கொண்டார். சண்டை நடந்து கொண்டிருந்த பகுதியில் யாருடைய அனுமதியும் இல்லாமல் காட்சி தந்த சாந்தகுமாரியை உடனேயே காவலரண் பகுதிக்கு திரும்பும்படி பிரிகேடியர் யாழினி அவர்கள் இறுக்கமான கட்டளை ஒன்றை வழங்கிய பிறகும் மனமில்லாது தனது இடத்துக்குத் திரும்பினார். தான் சண்டைக் களத்துக்குப்போய் எதிரியோடு நேருக்கு நேர் நின்று சண்டை பிடித்துவிட்டேன் என்ற மகிழ்ச்சியில் தனக்கு வழங்கப்பட்ட ஒறுப்பைக்கூட சிரிப்புடனேயே ஏற்றுக் கொண்டார்.

இவர் முத்துக்குப் பெயர்போன மன்னார் மாவட்டத்தில் திரு. திருமதி சூசையப்பு இணையருக்கு 1972ம் ஆண்டு ஆடித்திங்கள் 19ம் நாள் பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்டபெயர் மொறாயஸ் ரமணி. இவரது குடும்பத்தினர் மூத்த தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் காலப்பகுதியிலேயே சிறீலங்கா படையினருக்குத் தெரியாமல் போராளிகளை ஆதரித்துவந்தனர். அந்த நாட்களில் இவரது அண்ணா போராட்டத்தில் இணைந்துவிட்டார். இவர் தன் அண்ணா மீது அதிக அன்புடையவர். அண்ணனின் பிரிவு இவரை வாட்டியது. 1990ம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சண்டையில் இவரது உயிர் அண்ணனான வீரவேங்கை யேசுதாஸ் வீரகாவியமாகிவிட்டார். அண்ணனின் இலட்சியப் பாதையை பற்றி அண்ணனின் ஆயுதத்தை தானே ஏற்க வேண்டும் என்பதற்காய் அதே ஆண்டிலேயே இவர் எமது விடுதலைப் போரில் இணைந்தார்.

இவர் 1990ம் ஆண்டு முற்பகுதியில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் 10வது பயிற்சிப் பாசறையில் லெப். கேணல் மாதவியிடம் மணலாற்றுக் காட்டுப் பகுதிக்குள் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். பள்ளிப் பட்டறிவோ படிப்பின் மணத்தையோ பெரியளவில் அறியாதவர். ஆனால் பட்டறிவினால் பல களங்களை இவர் படித்திருந்தார். மக்களோடும் போராளிகளோடும் அன்பாகப் பழகுவார். அன்போடு பண்பும் கொண்டவர். தனக்குக் கீழுள்ள போராளிகளை அவரவர் திறமைக்கேற்பவும் தரத்துக்கேற்பவும் மரியாதை கொடுத்து பணிவாக நடந்து கொள்வார். ஒவ்வொரு போராளியினதும் வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டுவார். தெரியாத விடயங்களைப் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமுடையவர். அதற்காக ஒரு போதும் அவர் கூச்சப்பட்டதில்லை. சிறு விடயமானாலும் சிறிதளவு உணவானாலும் எல்லோரிடமும் பகிர வேண்டும் என்கின்ற எண்ணம் உடையவர். இவருக்கு நாவற் பழங்கள் என்றால் நல்ல விருப்பம். ஒரு நாள் சில போராளிகள் நீண்ட தூரம் சென்று இவருக்காய் நாவற்பழங்களை பிடுங்கிக்கொண்டு வந்தபோது முக்கால்வாசிப் பழங்கள் நசிபட்டுப் பழுதடைந்துவிட்டன. ஆனாலும் அந்தச் சிறிய தொகை நாவற்பழங்களை நன்றாகக்கழுவி, ஒவ்வொரு காவலரணாகச் சென்று எல்லாப் போராளிகளுக்கும் கொடுத்த பின்னரே தான் உண்டார். அதேபோல் புதிர் கணக்குகள் சொன்னால், அதை எல்லோருக்கும் கூறி அதற்கான விடையைச் சரி பார்த்துவிட்டுத்தான் மற்ற வேலைகளைப் பார்ப்பார். ஓய்வுடன் இருக்கும்போது தனக்குத் தெரியாத அடிப்படை விடயங்களைப் படித்தறிவதற்காய் எந்நேரமும் கொப்பியும் பேனையும் கொண்டு திரிந்து தெரிந்தவர்களிடம் கேட்டுப்படிப்பார். பம்பல் அடிப்பதிலும் நாசூக்காக மற்றவர்களை நக்கல் அடிப்பதிலும் திறமையாக இருந்தார்.

பயிற்சியை முடித்தவுடனேயே களமுனைகள் அவரை வரவேற்றன. இவரின் முதலாவது சண்டைக்களம் யாழ். கோட்டை முற்றுகையாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை மீட்புச் சமரே அவரது முதற்களமாய் இருந்ததற்காக இவர் அடிக்கடி பெருமைப்படுவதுண்டு. பலாலி, ஆனையிறவு மீதான ஆகாய கடல்வெளித் தாக்குதல், மின்னல், கஜபார, பலவேகய -02, மண்கிண்டிமலை மீதான இதயபூமித் தாக்குதல் எனத் தொடர் களங்கள் இவரை வரவேற்க, தனது திறமையை வெளிக்காட்டினார். தொடர்ச்சியான களமுனைகள் இவரின் வளர்ச்சிக்குப் படிக்கற்களாக இருந்தன. யாழ். தேவி எதிர் நடவடிக்கையிலும், எம்மவர்களால் பூநகரி பகுதியில் நாடாத்தப்பட்ட 'தவளை' நடவடிக்கையிலும் திறமையாக பங்காற்றினார். பின்னர் 1993ம் ஆண்டு காலப்பகுதியில் தேவை கருதி கண்ணிவெடிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டார். அங்கு நடைபெற்ற படிப்புக்களையும் பயிற்சிகளையும் வேவுப்பயிற்சியையும் ஆர்வத்துடனும் திறமையுடனும் செய்தார். இவர் கண்ணிவெடிகளோடு களமுனையில் செய்த செயற்பாடுகள் அளப்பரியது.

1995ம் ஆண்டு 3ம்கட்ட ஈழப்போர் தொடங்கிய காலப்பகுதியில் கண்ணிவெடிப் போராளிகளின் பணி மிக முக்கியமாய் இருந்தது. இவர் மண்டைதீவுச் சண்டைக்கு சென்றதோடு மணலாற்றில் ஐந்து இராணுவத் தளங்கள் மீதான தாக்குதலிலும் திறம்படப் பங்காற்றினார்.

'இடிமுழக்கம்' என்ற பெயரில் எதிரி ஒரு வலிந்த தாக்குதலை செய்தபோது இவரின் கண்ணிவெடிப்பணி அங்கிருந்தது. சூரியகதிர்-01, 02 என எதிரி மேற்கொண்ட வலிந்த தாக்குதல்களானது இவர் போன்ற கண்ணிவெடிப் பிரிவுப் போராளிகளின் சண்டைத் திறமையை வளர்ப்பதற்கும் மேன்மேலும் திறம்பட வளர்ச்சி அடைவதற்கும் உரகற்களாய் அமைந்தன. தேவையான இடங்களில் கண்ணிவெடி, மிதிவெடி, பொறிவெடிகள் என்பவற்றை வைப்பதும் அவ்விடத்தில் எதிரி வரும்போது ஏற்படும் இழப்புக்களை கண்காணிப்பதுமான கடும் பணிகளுடன் இவரது களமுனைக்காலம் நகர்ந்தது.

சாந்தகுமாரி ஒரு நாள் களமுனைப்பகுதியில் மிதிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தபோது இரண்டு கைகளையும் மென்மையான துணியால் சுற்றி பந்தமாய் கட்டியிருந்தார். அவர் அருகில் சென்ற பொறுப்பாளர், "என்ன சாந்தகுமாரி? கையில் காயமா?" எனக் கேட்டபடி அருகில் வந்தார்.

"ஒன்றும் இல்லையக்கா" என மழுப்ப முயன்ற சாந்தகுமாரியின் கைகளில் சுற்றப்பட்ட துணிப்பந்தத்தை அவர் விலக்கியபோது கைகள் இரண்டும் கொப்புளங்கள் போட்டு உடைத்திருந்தது தெரிந்தது. கவலையுடன் நோக்கிய பொறுப்பாளரிடம் "ஒன்றுமில்லையக்கா. கையில கொப்புளங்கள். துணியைச் சுற்றினால் வலிக்காது என்று துணியைச் சுற்றிவிட்டு வேலை செய்கின்றேன்" என்றார் தன் வழமையான சிரிப்புடன.

தன் வேதனைகளைக்கூட களமுனைக் கடமைகளில் மறந்து சிரிக்கும் ஒரு போராளியாகவே இவர் இருந்தார். அத்துடன் இரவில் வேவுக்கு சென்று எதிரியின் பகுதிக்கும், எமது பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் எதிரி வரக்கூடிய இடங்களில் வெடிக்கக்கூடிய மாதிரி சூழ்ச்சிப் பொறிகளை வைத்துவிட்டு வருவார். பகலில் தான் வைத்த சூழ்ச்சிப் பொறிகளை கண்காணிப்பு இடத்தில் இருந்து பார்த்தபடி இருப்பார். எதிரி முட்டுப்பட்டு வெடிப்பதை பார்த்துவிட்டுத்தான் உரிய இடத்திற்குத் திரும்புவார்.

சூரியகதிர் - 02 முடிந்து படையணிகள் வன்னிக்கு வந்து ஓயாத அலைகள் - 01 நடைபெற்ற பின்னர் மீட்கப்பட்ட முல்லைத்தீவு பகுதிகளை சாந்தகுமாரியின் தலைமையிலான கண்ணிவெடி அணி கண்ணிவெடி, மிதிவெடிகளை பல நாட்களாக நின்று அகற்றியது. பின் சத்ஜெய 01, 02, 03 எதிர்ச்சமர்க்களங்களில் இவர்கள் விதைத்த ஜொனி மிதிவெடிகள் எதிரிக்கு கணிசமான இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தன. தொடர்ச்சியாக அயராது எம் போராட்டத்திற்கு அரும்பணி ஆற்றிக்கொண்டிருந்தார் சாந்தகுமாரி. களமுனைகளை தன் வீடாகவும் சண்டைகளை தன் வாழ்நாளாகவும் கொண்டவர்தான் சாந்தகுமாரி. இவர் சண்டைகளோடு மட்டும் அல்லாது குறும்புத்தனங்களும் செய்வார். வகுப்புக்கள் என்றால் ஈடுபாடு குறைவு. ஆயினும் ஒரு தடவை சொல்லிக் கொடுத்தால் மனதில் பதிய வைத்துவிடுவார். அப்போது எமதணிகள் கிளிநொச்சி காவலரண்பகுதிகளில் நின்றது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போராளிகளை பின்னணிக்கு எடுத்து படிப்பிப்பார்கள். அதில் இவரும் ஒருவர். வகுப்பு என அறிவித்த நேரத்திற்கு அரை மணிக்கு முன் எதிரியின் பகுதி மீது தாக்குதலை செய்வார். அவ வளவுதான், அலறித்துடித்து எதிரியானவன் எமது பகுதி மீது தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலோடு துப்பாக்கிச்சூடும் நடத்துவான். இதனால் வகுப்புக்கள் நடைபெறாது. இப்படியாக இவர் செய்த குறும்பு வேலைகளால் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் வகுப்புக்கள் நடைபெறவில்லை. இது எப்படியோ அப்பகுதியின் பொறுப்பாளருக்கு தெரிந்துவிட்டது. அதன்பின் சண்டை நடந்தாலும் வகுப்புக்கள் நடைபெறும் எனக் கூறிவிட்டார்.

ஒருநாள், அடுத்த வகுப்பில் பரீட்சை நடைபெறும் என ஆசிரியர் அறிவித்திருந்தார். இவரால் தப்ப முடியாத நிலை. பொறுப்பாளர் விடமாட்டார் என்பதற்காய் வகுப்புக்கு வந்தவர் இடையில் ஒருவருக்கும் தெரியாமல் ஜம்பு மரம் ஒன்றில் ஏறி ஒழிந்துவிட்டார். இவருடன் சென்ற போராளிகள் அனைவரும் இவரைத் தேடிவிட்டு பரீட்சை எழுதிவிட்டு திரும்பியபோது ஜம்பு மரத்திலிருந்து குதித்து, "அப்பாடா! இப்பத்தான் நிம்மதி" என்றவாறு போராளிகளுடன் சேர்ந்து காவலரண்பகுதிக்கு சென்றார். எப்படியாவது குறும்புத்தனங்கள் செய்து படிக்காவிட்டாலும் பட்டறிவினால் திறம்படச் செய்வார். இவரைப் பொறுத்தளவில் பட்டறிவே மிகப்பெரிய ஆசானாய் இருந்தது.

இவ்வாறாக இவரின் களப்பணி எமது போரின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றியது. ஆனையிறவு-பரந்தன் சமரின் போது மிதிவெடிகளை விதைத்து எதிரிக்கு பெரிய இழப்பை இவரது அணி ஏற்படுத்தியிருந்து. ஜெயசிக்குறு களமுனையில் லெப்.கேணல் தட்சாயிணிக்கு தொலைத் தொடர்பாளராய் இருந்து கொண்டு எதிரியின் பகுதிக்குள் சென்று வேவு பார்த்து வருவதோடு, கண்ணிவெடிகளையும் விதைத்து வருவார்.

இவர் சிறந்த துப்பாக்கிச் சூட்டாளர் நன்றாக குறிதவறாது சுடுவார். ஒரு தடவை படையணியில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் மூன்று பரிசில்களையும் தேசியத்தலைவரின் கையால் பெற்றார். பின்னர் நடந்த போட்டிகளிலும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். படையணியில் துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் அதிக பரிசில்களை பெற்றவர் என்ற பெருமை லெப்.கேணல் சாந்தகுமாரியையே சாரும்.

இவரின் திறமைகண்டு இவருக்கு 1996ம் ஆண்டு 40மில்லிமீற்றர் எறிகணை செலுத்தி கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கிளிநொச்சி - பரந்தன் சமருக்கு சென்றபோது 01.02.1998 அன்று முதுகிலும் வாயிலும் காயப்பட்டும் தன் எறிகணை செலுத்தியைக் கைவிடவில்லை. சிகிச்சைக்காய் மருத்துவமனை சென்றவர், மீண்டும் உடற்காயங்கள் மாறும் முன்னே களமுனைக்கு வந்தார். ரணகோச சண்டைக் காலப்பகுதியில் தன் சொந்த மண்ணான மன்னாரில் குறிப்பிட்ட அணிகளுக்கு பொறுப்பாக நின்றார். பழக்கப்பட்ட இடம் ஆதலால் நீண்ட தூரம் காட்டுக்குள் சென்று வேவு பார்ப்பது என ஓயாது செயற்பட்டார்.

இவர் சிந்தனைகள் யாவும் சண்டையைப் பற்றியதாகவே இருக்கும். இவரது கனவுகளிலும் நினைவுகளிலும் சண்டைக்காட்சிகளே நிறைந்திருக்கும்.

வோட்டஜெற் எதிர்ச் சண்டையில் தனது கள வேலைகளைத் திறம்படச் செய்தார் பின் 1999ம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் வெற்றிலைக்கேணிப் பகுதியில் நின்ற ஓயாத அலைகள்-03 சிறப்பு அணிகளுக்குப் பொறுப்பாய் நின்றார். அப்போது நத்தார் காலம். கிளிநொச்சியில் நின்ற எமது அணியினர் தொலைத் தொடர்புக் கருவியில் சாந்தகுமாரியிடம் "நத்தாருக்கு என்ன விசேடம்" எனக் கேட்க,
"பெரிசா ஒண்டுமில்லை. எங்கட பகுதிக்கு நத்தார் கொண்டாட வாற விருந்தாளிகளுக்கு நல்ல விருந்து கொடுத்து, 50 பேற்ற பொடியை எடுத்து வைக்கவேணும் எண்டு முடிவு எடுத்திருக்கிறோம்" என்றார். உண்மையில் அவர் சொன்னதற்கேற்ப செயலிலும் காட்டினார்.

உலகமே ஆவலுடன் 2000ம் ஆண்டின் வரவிற்காய் காத்திருக்க இவரோ தனது அணியுடன் எதிரியின் வரவிற்காய் காத்திருந்தார்.

அந்தப் புதிய நூற்றாண்டின் முதல் நாளில் அவருக்கு அருமையான சண்டை வாய்ப்புக் கிடைத்தது. வெள்ளம் போல் வந்து எமது பகுதிக்குள் நுழைய எதிரி முயன்றபோது, இவரோடு நின்ற மேஜர் வேழினியின் அணி தனித்துவிட்டது. எதிரியோ அவர்களைச் சுற்றி வளைத்து விட்டான். இந்த இக்கட்டான நிலையிலும் இவர் ஒரு கணமும் பதட்டப்படாமல் தன் 40 மில்லி மீற்றரால் அடித்து எதிரியைச் சமாளித்தபடியே தொலைத் தொடர்புக் கருவியில் கட்டளைகளை வழங்கி எம்மவர்களை ஒருங்கிணைத்து எதிரியை அவ்விடத்தில் இருந்து முற்றாகத் துரத்தி, அங்கிருந்த கட்டளை மேலாளரோடு அணிகளையும் காப்பாற்றி எல்லோரது பாராட்டையும் பெற்றார். இதனால் எதிரியால் மேற்கொள்ளப்பட்ட பெரிய சுற்றி வளைப்புத் தாக்குதல் ஒன்று இவரது துணிகர செயற்பாட்டால் வெற்றிகரமாய் முறியடிக்கப்பட்டது. அத்தாக்குதலை முடித்துக் கொண்டு வன்னிக்கு வந்து தலைவரின் சிறப்பான பாராட்டையும் பரிசையும் பெற்றுக்கொண்டார்.

ஓயாத அலைகள் - 03 இன் கட்டம் 4ற்கான திட்டமிட்ட தாக்குதல் பயிற்சிகளை உடல் இயலாத நிலையிலும் ஊக்கத்துடன் எடுத்தார். பயிற்சி முடிந்ததும் வரலாற்றுச் சிறப்பு மிக்க குடாரப்பு தரையிறக்கச் சண்டைக்குச் சென்றார். தரையிறங்கிய அந்நாளே நெஞ்சில் காயப்பட்டு மருத்துவத்திற்காக வன்னிக்கு வந்தார். எப்போது காயம் மாறுமெனக் காத்திருந்து காயம் மாறியவுடன் அதே களமுனைக்குச் சென்றார்.

2000ம் ஆண்டின் பிற்பகுதியில் நாகர்கோயில் முன்னணிக் காவலரண் பகுதியில் எமது அணிகளுக்கு முதன்மைப் பொறுப்பாளராக இருந்தார். இவர் ஒருபோதும் கட்டளைப் பீடத்தில் நின்றதில்லை. அடிக்கடி காவலரண் பகுதியைச் சுற்றி வருவதோடு காவலரண் வேலைகளையும் போராளிகளோடு சேர்ந்து செய்வார். அப்பகுதியில் போராளிகள் வேவுக்குச் சென்றால் அவர்கள் திரும்பி வரும்வரையும் கண்விழித்து அவர்கள் சென்ற பாதையருகே காத்திருப்பார். அவர்கள் திரும்பி வந்ததுமே தானும் உறங்கச் செல்வார்.

ஓயாதஅலைகள் - 04 திட்டமிட்ட தாக்குதலுக்கான பயிற்சி நடைபெற்றது. உடற் காயங்களால் இயலாத நிலையிலும் பயிற்சி முடித்து 05.10.2000 அன்று பகல் 1.00 மணிக்கு சண்டைக்கான அணிகள் இவரின் தலைமையில் இறங்கின. இவருக்கு அடுத்த பொறுப்பாளராக உள் நுழைந்து தாக்கிய மேஜர் வேழினியின் தொடர்பை எடுக்க முடியவில்லை. அவர் எதிரிக்கு நெருக்கமான எல்லைக்குள் கடுமையாய் தாக்குதலைத் தொடுத்தபடியிருந்தார். அவரைச் சந்திப்பதற்காக சிறு அணி ஒன்றுடன் சாந்தகுமாரி முன்னேறினார்.

நாகர்கோயில் பகுதி சிறு சிறு பற்றைகளும் தென்னை, பனைகளும் இடையிடையே காணப்படுகின்ற வெட்டையான மணல் பிரதேசம் ஆகும். அப்படியான இடத்தில் எதிரியின் குண்டு மழை நடுவிலும் எமது அணிகள் விடாப்பிடியாக சமராடியபடி நகர்ந்து கொண்டிருந்தன. அந்தக் கணம் ஏன் வந்ததோ தெரியாது. வேழினியின் தொடர்பை எடுப்பதற்காய் சென்ற சாந்தகுமாரியை வேழினிக்காகப் பதுங்கி இருந்த எதிரியின் ரவைகள் பதம் பார்த்தன.

முதலாவது வேட்டில் நெஞ்சில் காயப்பட்டு எமது பகுதியை ஒரு கணம் திரும்பி பார்த்து விட்டு, அடுத்த வேட்டும் துளைத்ததில் நெஞ்சைப் பொத்தியபடி சரிந்தார். சாகும் வேளையிலும் கூட, "அடிச்சுக் கொண்டு இறங்குங்கோ, இறங்குங்கோ" என்று கத்தியபடி எதிரியின் பிடியில் உள்ள எமது பகுதியை மீட்கவேண்டும் என்ற ஓர்மமே முன்னோக்கி ஓடியபடி செங்குருதி சிந்த எம்மண்ணில் 06.10.2000 அன்று சரிந்தார். வித்துடலை மீட்கும்போது மூடியிருந்த இவரின் இரு கைகளிலும் எமது மண் இறுகப் பற்றப்பட்டிருந்தது.

மன்னார் மண்ணுக்கே உரித்தான அவரது தமிழ் இரசிக்கத்தக்கது. தலைவர் கூட அவரின் உரையாடலை சிரித்தவாறே கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

எமது விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் பணியாற்றிய லெப். கேணல் சாந்தகுமாரியின் இழப்பு எம் தேசத்திற்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பாகும்.

எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக்கொண்டிருக்கின்றன.

மூத்த உறுப்பினர் லெப் கேணல் அப்பைய்யா அண்ணா


எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.

அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாயகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் 'களத்தில்' என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

லெப் கேணல் பொன்னம்மான் அண்ணா


தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய துயரினை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் தொடங்கின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் இயலாமல் இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி படைய தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.

யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் படைமுகாம் மீது தாக்குதலை நடத்த தளபதி கிட்டுவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். படை முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பகுதி. வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய வாய்ப்பு இருந்தது. படை முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் கடினமானதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.

நாள் தோறும் அந்த படை முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நீர்தாங்கி ஊர்தி(பவுசர்) செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி கூலிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.

பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே செல்ல விடுவார்கள்.

இத்தனை கடினங்களிற்கும் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, படை முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். (அவர் பொன்னம்மானின் உறவினரும்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து வானூர்தி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்.(

14-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு ஏற்றதாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் படை உலங்குவானூர்திகள், குண்டு வீச்சு வானூர்திகளும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.

முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய சுமையூர்திகள்(லொறிகள்) ஏற்பாடு செய்யப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் சுமையூர்திகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். சுமையூர்திகளின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் சுமையூர்தியில் உந்துகணையுடன் (ரொக்கட் லோஞ்சருடன்) நிற்பவன் உட்புகும் போது உந்துகணையால் வாயில் காவலரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.

நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டு தாக்குதலை நடத்துவதற்காக, அனைவருடனும் தொலைத்தொடர்பு கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.

கிட்டு ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டு பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் சுமையூர்தி ஒன்று நின்றது. ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று நிகழ்வைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.

பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.

முகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் மகிழ்ச்சையைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. "அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. ஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்

லெப் கேணல் குமரப்பா அண்ணா


யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.தமிழர் தாயகப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினருக்கும், காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் பங்கெடுத்து சிறிலங்கா படையிருக்கு பல்வேறு அழிவுகளை ஏற்படுத்தியிருந்தார். தமிழீழத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கு எதிரான தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் பங்கு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குமரப்பா அவர்களின் திறமையை அறிந்திருந்த தேசியத் தலைவர் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட தளபதியாகவும், யாழ். மாவட்டத் தளபதியாகவும் நியமித்தார். தலைவர் அவர்கள் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை தனது செயற்பாட்டின் மூலம் குமரப்பா அவர்கள் நிருப்பித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் தளபதியாகவும். யாழ். மாவட்டத்தின் தளபதியாகவும் விளங்கிய காலத்தில் அந்தந்த மாவட்டங்களில் சிறிலங்கா படையினருக்கும், சிறிலங்கா காவல்துறையினருக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் ஈடுபட்டதுடன் அந்தந்த மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினை உறுதியாகக் கட்டியமைக்க அயராது உழைத்தார்.சிறிலங்கா - இந்திய உடன்படிக்கை காலப்பகுதியில் லெப்.கேணல் குமரப்பா அவர்கள் திருகோணமலை மாவட்டத் தளபதி லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட போராளிகளுடன் தமிழீழக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்தவேளை சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காங்கேசன்துறை படை முகாமிலும் பின்னர் பலாலி படைமுகாமிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களை கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு சிறிலங்கா - இந்தியப் படைகள் மேற்கொண்ட சதியினை முறியடிப்பதற்காக சயனைட் உட்கொண்டு தம் இன்னுயிர்களை இவர்கள் ஈகம் செய்தனர்.

இந்திய சிறிலங்கா படைகளின் சதியினை அறிந்து கொண்ட லெப்.கேணல் குமரப்பா அவர்கள் தன்னை அழித்து கொள்வதற்கு முன்னர் தேசியத் தலைவர் அவர்களிற்கு எழுதிய மடல்:

கனம் தலைவர் அவர்களுக்கு,

குமரப்பா ஆகிய நான் 3.10.87 அன்று அதிகாலை 4.30 மணியளவில் சிறிலங்கா கடற்படையால் பருத்தித்துறை கடலுக்கு மேலாக வைத்துக் கைது செய்யப்பட்டேன். பின்பு காங்கேசன்துறை முகாமிற்கு கொண்டு வந்து, அங்கிருந்து பலாலி இராணுவ முகாமுக்கு இந்திய அமைதிப் படையினரின் கண்காணிப்பிலும், இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பிலும் இருக்கிறேன்.

மேலும் என்னை கொழும்பிற்குக் கொண்டு செல்ல நேரிடலாம். நான் இலங்கை அரசாங்கத்தின் சட்டங்களை அங்கீகரிக்கவில்லை. என்னைக் கொழும்பு கொண்டு செல்ல நேரும் பட்சத்தில் என்னை முழுமையாக அழித்துக் கொள்ள சித்தமாயுள்ளேன்.

”புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்”

இங்ஙனம்
குமரப்பா
(ஒப்பம்)

லெப் கேணல் ரவி அண்ணா


வன்னிமண்ணில் திரு.திருமதி குமாரவேல் இணையருக்கு அன்பு மகனாய்ப் பிறந்த லெப்.கேணல் ரவி 1986ம் ஆண்டு தம்மை முழுமையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார். விடுதலைப் புலிகள் அமைப்போடு இணைந்து கொண்ட தொடக்க காலங்களில் லெப்.கேணல் ரவி அவர்கள் வன்னியின் மூத்த தளபதி மாவீரர் மேஜர் பசிலனுடன் இணைந்து சிறிலங்கா படைகளிற்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை மேற்கொண்டு, வன்னி மண்ணை சூறையாட முயன்ற பேரினவாதத்திற்கு சிம்மசொப்பனாக விளங்கினார்.

அமைதி காக்கவென வந்து எம்மண்ணில் அவலத்தை விதைத்த இந்தியப் படைகளுக்கு எதிராக உறுதியான எதிர்ப்புச்சமர் புரிந்தார். உலகின் நான்காவது பெரிய பலம் வாய்ந்த படைகளின் போர்க்கருவிகள் பலவற்றையும் கைப்பற்றி எமது படைபலத்தை பெருக்கிச் சாதனை படைத்தார்.

மாங்குளம் தளத்தைத் தாக்கி அழித்த நடவடிக்கைகளிலும் காத்திரமான பங்கை வகித்தார். சிறீலங்கா முப்படைகளும் இணைந்து நடத்திய பலவேகய-2 படை நடவடிக்கையின் போது வெட்டவெளிகளிலும், உவர் நிலங்களிலும் நின்று சமராடினார். எதிரிக்குச் சாதகமான நிலப்பரப்பில் மன உறுதி ஒன்றையே காப்பரணாக வைத்து லெப்.கேணல் ரவி களமாடிகொண்டிருக்கையில் எதிரியின் துப்பாக்கிச் சூடுபட்டு கையில் விழுப்புண்ணடைந்தார்.

1993ல் யாழ்தேவி நடவடிக்கையின் போது இடம் பெற்ற டாங்கிகள் தகர்ப்பினை முன்னின்று வழிநடத்தினார். தமிழீழ விடுதலை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த படையியல் நடவடிக்கைகளில் ஒன்றான பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின் போது வன்னி மாவட்ட படையணிகளின் இரண்டாவது பொறுப்பாளனாகக் கடமையாற்றினார். திறம்பட போராளிகளை வழிநடத்தி தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வலுச்சேர்த்தார்.

பூநகரிப் படைத்தளத் தாக்குதலின் பின்னர் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் லெப்.கேணல் ரவி வன்னி மாவட்ட சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் சிறப்புத் தளபதியாக இருந்த வேளையில் வவுனியா புறநகர்ப் பகுதியில் சிங்களப் படையின் பவள் கவசஊர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறிப்பிடத்தக்க தாக்குதலாகும்.

எண்ணற்ற தாக்குதல்கள், எண்ணிறைந்த வெற்றிகள் என சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருந்த சிறப்புத் தளபதி தாக்குதலொன்றிற்கான ஒத்திகை ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அவ்வேளையில் 17-03-1994 அன்று இடம்பெற்ற வெடிவிபத்து வன்னியின் சிறப்புத்தளபதி லெ.கேணல் ரவியோடு, கப்டன் சேந்தனையும் வன்னித் தாயின் மடியில் உறங்க வைத்துவிட்டது. உயிர் உடலில் இருக்கும் வரையும் தாயக மீட்பு ஒன்றையே சிந்தையாகக் கொண்டு சுழன்ற மறவன் லெப்.கேணல் ரவி ஆவர்.

மூலம் - எரிமலை

லெப் கேணல் சுபன் அண்ணா


மன்னார் மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார். மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக லெப். கேணல். விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை படைமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் சுற்றுக்காவல் படையினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் படை முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு படை முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர் ஆவார்.

இறுதியாக 25.09.92அன்று, பூநகரியில் பள்ளிக்குடா படைமுகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறீலங்கா இராணுவ மினிமுகாங்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபனும், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.


நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது நாடு. அந்த நாட்டில் வளமான, அமைதியானதொரு வாழ்வு வேண்டும். காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்தது போதும். என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாநிலை, அமைதிப்போராட்டங்கள் என்று அமைதிவழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த வல்லாதிக்க கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.1983ல் திருநெல்வேலித் தாக்குதலுடன் பல இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். படையினரும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாகப் பறித்தன. தமிழீழத்தின் அத்தனை சாலைகளிலும் படையினர் கால் பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக் கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

'சுபன்' தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் ஊரில் 1965ம் ஆண்டு, ஆடித் திங்கள் 21ம் நாள்பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார். கள்ளியடியில் தனது கல்வியைத் தொடங்கி, பின் அயல் ஊரில் உள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.

இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய், விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.

1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில், ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் சிறப்புக் கொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார். பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடு தோள் நின்று போராடினார். அமைதிக் கொடியேற்றிவந்த இந்திய படையினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார். பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னர் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை படைமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப் கேணல் நவம் அண்ணா


படைய ஆய்வு முயற்சி ஒன்றின் போது கையை இழந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான் ஒரு போராளி. வருவோர் போவோர் எல்லாம் அவனுக்கு ஆறுதலும், இரக்கமும் தெரிவிக்கின்றனர். அது அவனுக்கு சினத்தை மூட்டுகின்றது. இறுதியாக அவனது தாய் வருகின்றாள். நீ போராடியது போதும். இனி உனக்கு ஒரு கையில்லை வீட்டிலேயே இரு. அன்பின் மேலீட்டால் இப்படியோரு வேண்டுகோளை விடுகின்றாள் தாய். அது அவனது மனக்கொதிப்பை அதிகரிக்கினறது. தனக்கு இரக்கம் கூறவந்தவர்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்ல இதுதான் சரியானவேளையெனத் முடிவெடுக்கிறான்.

"எனக்கு இன்னொரு கை இருக்கு”. உறுதியுடன் தெளிவாக ஒலிக்கின்றது அவனது சொற்கள். அவனுக்கு ஆறுதல் கூற முனைந்தவர்களும் தமது தவறை எண்ணி நாணுகின்றனர். கால் இழந்த போராளிகளுக்கு கிட்டு எப்படி நம்பிக்கை ஒளியாக, வழிகாட்டியாக திகழ்கின்றாரோ அதே போலத்தான் போராட்டத்தில் தமது கரங்களை இழந்த போராளிகளுக்கு வழிகாட்டியாக விளங்குகிறான் அவன். அவன்தான் டடி.

டடி-நவம் வன்னிக் காடுகளின் மூலை முடுக்குகள் எல்லாம் இவனுக்கு அத்துப்படி. இக்காடுகள் பற்றிய படம் இவன் நெஞ்சில் நிறைந்திருக்கும். இவன் பிறந்தது மலைப் நாட்டில். போராடியது வன்னிக் காளங்களில். வன்னியை காதலித்த.... வன்னிக் களத்திலே காயமுற்ற இவன் உயிர் பிரிந்தது தமிழகத்தில்.

பசிலனையும், லோறன்சையும் சேர்த்தால் அதுதான் நவம். இவனுடன் நெருங்கிப் பழகிய ஒரு போராளி கூறிய சொற்கள் இவை. ஒவ்வொரு போராளிக்கும் தனித்துவமாக சில ஆற்றல்கள் இருக்கும். துணிச்சலுக்குப் பெயர் போனவன் பசீலன். சிறந்த மதிநுட்பத்திற்குப் பெயர் போனவன் லோறன்ஸ். இருவரது தன்மைகளையும் ஒருவரிடத்தில் கண்டதால்தான் நவத்தைப் பற்றி அப் போராளி இவ்வாறு குறிப்பிட்டான்.

விருந்தாளிகளாக வந்தோரால் எதிலியாக்கப்பட்டதுதான் மணலாற்று மக்களின் வரலாறு. இன்றோ தமது சொந்த நிலத்தை தாமே பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுடன் நிற்கிறார்கள் மணலாறு மக்கள். வரலாற்றில் இந்நிலையை ஏற்படுத்தியதில் கணிசமான பங்காளிகள் நவமும் அவனது தந்தையுமே. எப்போதும் துப்பாக்கியுடன் காணப்படும் ஓமர்முக்தார் என்று போராளிகளால் அழைக்கப்படும் இவனது தந்தையும் இவனும் இந்த மண்ணை விட்டு நாம் எங்கும் போவதற்கில்லை என்ற செய்தியை ஸ்ரீலங்கா அரசிற்கு அடிக்கடி உணர்த்தினார்கள்.அரசன் ஒருவன் தான் கைப்பற்றும் இடங்களைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருப்பதற்கு அவனுக்கு உதவுவது அங்கு அவன் விட்டுச் செல்லும் அவனது படை முகாம்கள் அல்ல. இதைவிட அவன் தனது இடத்து மக்களை அங்கு குடியேற்றுவதன் மூலம் சிறப்பாகச் செய்யலாம். அங்கு குடியேறும் மக்கள் அங்கு நிரந்தரமாக வசிக்கப் போகிறவர்களாதலால் அவர்கள் எவ்வித இடர்களையும் எதிர் கொள்ளவும், அவ்விடங்களைத் தமதாக்கிப் போராடுவதற்கும் தயாராக இருப்பார். இது இளவரசன் என்னும் நூலில் காணப்படும் மாக்கிய வல்லியின் கூற்று. இதை அப்படியே நடைமுறைப்படுத்தியதால்தான் இன்று அம்பாறை என்றொரு தொகுதியே முழுச்சிங்களத் தொகுதி என்றாகிவிட்டது. இதையே படிப்படியாக திருமலை, மணலாறு என விரிவாக்கி வருகின்றது சிங்கள அரசு. ஆனால் இது தமிழீழ மண் என்று எல்லை போட்டுக் காட்டியது நவத்தின் துப்பாக்கி. குடியேற்றக்காரர்கள் என்பது வல்வளைப்பு படைகளின் ஒரு வடிவமே என்பதை இவன் உணர்ந்து அதுக்கேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டபடியால் இன்னொரு ஓதியமலை வரலாறு மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டது.

நெருக்கடி மிகுந்த காலகட்டங்களான, எங்கும் இந்திய இராணுவமணம் வீசிய அந்த நாட்களில் இயக்கத்தையும், இயக்கத் தலைமையயும் பாதுகாக்க இவன் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும் பற்றி இவனுடன் பழகிய ஒவ்வொரு போராளியும் கண்கள் பனிக்க கதைகதையாய் கூறுகின்றனர். சூழலுக்கேற்ற மாதிரியும், மக்களுக்கேற்ற மாதிரியும் அமைந்த இவனது ஒவ்வொரு செயலும் போராட்டம் பற்றிய தெளிவை புதிதாகப் போராட்டத்தில் இணைந்து கொள்ளும் இளைஞர்களுக்கும், யுவதிகளிற்கும் ஊட்டியது. நெருக்கடியான காலகட்டத்தில் பதட்டபடாமல் செயற்படும் துணிவை சகபோராளிகளுக்கு ஊட்டினான். காட்டில் நவம் நிற்கும் பகுதி ஒரு பாதுகாப்பு வலயம் என்றே கூறலாம். அந்தளவுக்குச் சிறந்த முறையில் ஒரு ஒழுங்கமைப்பை உருவாக்கியவன் அவன்.

ஒற்றைக் கையால் இவன் செய்யும் வேலைகளைப் பார்த்த ஒவ்வொருவருக்கும், இவனால் இது முடியுமானால் என்னால் ஏன் முடியாது என்ற தன்னம்பிக்கையை ஊட்டியது. அவ்வாறு உருவான போராளிகள்தான் வன்னி மாண்ணைக் காத்து நிற்கின்றனர். கணக்கற்ற களங்களைக்கண்ட இவனை நாம் இழந்தது உண்மைதான். ஆனால் இவனால் ஊட்டப்பட்ட ஒழுங்கமைப்பு, போராட்ட உணர்வு எதையும் மணலாற்று மண் மறந்துவிடவில்லை. அவ்வப்போது மணலாறு பகுதியில் எதிரியிடமிருந்து இவனால் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் திரியும் போராளிகளும், ஊர்காவல் படையும் சொல்லும் செய்தி இதுதான்.

லெப் கேணல் ராதா அண்ணா


யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் பார்ப்பவர்கட்கு அவர் ஓர் அரச மேலாளரைப் போலவோ அல்லது மருத்துவரைப் போலவோ தோன்றினாரே அன்றி வேறு வகையான பார்வையைக் கொடுக்கவில்லை.

அமைதியும் கவர்ச்சியும் கொண்ட அவரது தோற்றத்தைப் போலவே அவரது அணுகுமுறைகளும் அமைந்திருந்தன. 8ம் வகுப்பில் படிக்கும் போதே சாரணர் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட ராதா உயர்தர வகுப்பு படிக்கும் வரை சாரணர் இயக்கத்தில் இருந்து கல்லூரியின் பயிற்சிப் பாசறைக்கே தலைவனாக இருந்ததினால் கல்லூரிக் காலத்தில் இருந்தே அவரிடம் செயலாணை(நிர்வாக) ஒழுங்குகளும் கட்டுப்பாடுகளும் நிறைந்து காணப்பட்டன.

யாழ். இந்துக் கல்லூரியில் மாணவ தலைவர்கட்கு முதன்மை மாணவத் தலைவனாக இருந்த ராதா வகுப்பறைகளின் நடைபாதைகளில் நடந்து வந்தாலே மாணவர்கள் பள்ளி முதல்வரைக் கண்டதுபோல் அமைதியாகி விடுவார்கள். இது ராதா மாணவப் பருவத்து நினைவுகள்.

கல்வி, விளையாட்டு, செயலாணை என்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கிய ராதா தனது கல்லூரி வாழ்வை முடித்துக் கொண்டு கொழும்பில் வைப்பகம் ஒன்றில் பணிபுரிந்தார். 1983ல் நடைபெற்ற இனப்படுகொலைகளை கண்களினால் கண்ட ஹரிச்சந்திரா உடனடியாகத் தன்னை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு இணைத்துக்கொண்டார்.

அறிவும், ஆற்றலும், வீரமும், விவேகமும் ஒருங்கே கொண்ட ஒரு வித்தகனை விடுதலைப்புலிகள் இயக்கம் பெற்றுக்கொண்டது. இந்த வேறுபாடுடைய வீரனை, நடமாடும் பல்கலைக் கழகத்தினை இனங்கண்டுகொண்ட தேசியத்தலைவர், ராதாவின் ஆற்றலும், ஆளுமையும் அவரைப் போல பல நூறு போராளிகளை உருவாக்கும் என்பதை உணர்ந்து கொண்டு பயிற்சி முகாமினை நடாத்தும் பணியினை ராதாவிடம் ஒப்படைத்தார். அந்தப் பல்கலைக் கழகத்திடம் இருந்து விடுதலைப்புலிப் போராளிகள் படித்துக்கொண்ட பாடங்கள் தான் எத்தனை? எத்தனை?

பயிற்சி முகாமில் புலிக்கொடி பறக்கிறது. போராளிகள் அணிவகுத்து நிற்கின்றார்கள். இப்போது கல்லூரியில், வீதிகளில் கண்ட ஹரிசந்திராவை அங்கே காணமுடியவில்லை. ஆங்கிலப் படங்களில் வெறுமனே வேசமிட்டு வரும் ஒரு பெரிய படை மேலாளரைப்போல் ஒருவனை அங்கே காணமுடிந்தது.

"Scout Attention" என்ற மேலாண்மை அறைகூவலும், உருமறைப்பு உடைகள் உரசும் சத்தத்துடனான படைய நடையும் அவருக்கே உரியவை. பயிற்சிக் கழகத்தில் ராதாவைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அவ்வளவு கடுமை, மிக வேகம்.அதுதான் ராதா.

ராதா அசைக்க முடியாத தன்னம்பிக்கை மிக்கவர். அதேபோல் தலைவரும் ராதா மேல் நம்பிக்கை கொண்டிருந்தார். பயிற்சி முகாம்களில் பயிற்சி பெறும் போராளிகள் கடுமையான கொமாண்டோ பயிற்சிகளை பெறும்போது அவர்களின் பின்னே போலிக்குண்டுகளைப் பயன்படுத்தி போர்க்கள நிலைமையைப் போன்ற மனமயக்கத்தை உருவாக்கும் போர்ப்பயிற்சி மரபுமுறை. ஆனால் ராதா இந்த மரபுகளை மீறினார். தான் போலிக்குண்டுகளை பயன்படுத்த விரும்பவில்லை, உண்மையான குண்டுகளை பயன்படுத்தப் போவதாக ராதா தலைவரிடம் இசைவு வேண்டினார். ராதாவின் திறமையிலும் நம்பிக்கையிலும் நம்பிக்கை கொண்டிருந்த தலைவர் ராதாவிற்கு இசைவு கொடுத்தார்.

"படுத்து நிலையெடு" (Down Position) இது ராதாவின் கட்டளை. பயிற்சி பெறும் போராளிகள் வேகமாக நிலை எடுத்து நகர்கிறார்கள். அப்போது அவர்களின் பின்னே நின்ற ராதா எம்-16 ரகத் துப்பாக்கியினால் அவர்களின் பாதணிகளைக் குறிபார்த்துச் சுடுகிறார். உண்மையான ரவைகள் பாதணிகளில் பட்டும் படாததுமாய் செல்கின்றன. அருகே நின்று பயிற்சியை மேற்பார்வை செய்துகொண்டிருந்த பொன்னம்மான் சொல்கிறார் "அது தான் ராதா". அன்றைய பயிற்சி முடிந்து போராளிகள் தங்கள் தங்குமிடங்களுக்கு செல்கின்றார்கள். அங்கே தங்களது இரும்பிலான அடிப்பாகங்களைக் கொண்ட பாதணிகளைக் கழற்றிப் பார்க்கிறார்கள். சிலரது பாதணிகளை எம்-16 ரவைகள் துளைத்திருந்தன. இந்த ஓய்வு நேரத்தில் அந்த ”மேலாளரைக் ராதா”வைக் காணவில்லை. ஒரு நல்ல நண்பனை அங்கே காணமுடிந்தது. ”என்ன ஐ சே கஸ்டமா இருக்கா, துன்பந்தான்”. இப்படிக் கதைப்பது ராதாவின் வழமை.

பள்ளிக்கால காதல் கதை கேட்கும் அளவிற்கு பழகுவார் ராதா. ஒரு மாலை நேரம் பயிற்சி முடிந்து எல்லோரும் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு போராளி தனது பள்ளிக்காதலியின் பெயர் இராசாத்தி என்றும் அவளைப் பற்றிய கதைகளையும் ராதாவோடு கதைத்திருந்தான். சிறிது நேரத்தில் முகாமின் ஒலிபெருக்கி "இராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் மெதுவாக ஒலித்துக்கொண்டிருந்தது. இப்படி ராதா வேறுபாடானவர்.

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மூன்று மொழிகளையும் அறிந்திருந்த ராதாவின் மிசையத்தில்(மேசை) நூல்கள் குவிந்திருக்கும். அவர் தெரிந்து வைத்திருக்காத துறையே இல்லை என்று துணிந்து கூறலாம். ராதாவின் ஆற்றல் கண்டு தலைவரே ஒரு தடவை வியந்து புகழ்ந்ததுண்டு.

அடர்ந்த காடு குறிப்பிட்டளவு போராளிகள், பொன்னம்மான், விக்டர் உட்பட சில தளபதிகள் அவர்களோடு தலைவர். இவர்களுடன் கையில் தொலைத் தொடர்பு கருவியுடன் ராதா. எல்லோரும் மிகுந்த மகிழ்வோடு தலைவரும், பொன்னம்மானும் கூறும் கதைகளைக் கேட்டபடியே காட்டின் வழியே நடந்து கொண்டிருந்தார்கள். எல்லோரோடும் சேர்ந்து சிரித்துக் கதைத்தபடி நடந்து கொண்டிருந்த ராதா திடீரென "Down Postion" என உரத்த குரலில் கட்டளை பிறப்பித்தான். தலைவர் உட்பட எல்லோரும் கட்டளைக்குப் பணிந்தார்கள். தலைவனும் தளபதிகளும் உள்ளிருந்து வெளிநோக்கி வியூகம் அமைக்குமாறு சைகையால் கட்டளை கொடுத்தார்கள். அதுவரை எதுவுமே நடக்கவில்லை. சிறிது சிறிதாக கேட்ட ரீங்கார சத்தம் ஒன்று மட்டும் கூடிக்கொண்டு வந்தது. அதுவரை ராதாவைத் தவிர எவருக்கும் எதுவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் காட்டுத் தேனீக்களின் பெரிய கூட்டமொன்று பேரிரைச்சலுடன் எல்லோரையும் கடந்து சென்றது.

தேனீக்கள் கண்களில் இருந்து மறைந்ததும் எல்லோரும் எழுந்தார்கள். பொன்னம்மானும் தலைவரும் ராதாவைப் பார்த்தார்கள். " காடு பற்றிய புத்தகம் ஒன்றில் படிச்சனான் அண்ணை. சத்தம் சிறிதாக இருக்கும் போதே இதுவா இருக்குமோ என்று நினைச்சுத்தான் கட்டளை (Command) கொடுத்தனான். அதுபோலவே நடந்துவிட்டது. இந்தத் தேனீக்கூட்டம் பாதை மாறாதாம் வந்த வழியே பறக்குமாம். நாங்கள் கீழே படுக்காமல் நடந்து வந்திருந்தா இண்டைக்கு எங்களிலே கனபேருக்குக் கண் பறந்திருக்கும்" என்று ராதா கூறி முடித்தார்.

ராதாவைத் தொடர்ந்து பொன்னம்மான் போராளிகளைப் பார்த்து " இண்டைக்கு இதிலை இரண்டு விசயம் படித்திருக்கிறியள். ஒரு திடீர் கட்டளை வந்தால் எப்படி நிலை (position) எடுக்கிறது ஒன்று கட்டளை (order) வந்தால் கேள்வி கேட்கக் கூடாது எண்டது இரண்டாவது. ஏன் படுக்க வேணும் எதற்குப் படுக்க வேணும் என்று யாரும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் இப்ப கண் போயிருக்கும் Down என்றால் Down தான்" என்று சொல்லிச் சிரித்தார்.

இவ்வாறு எண்ணற்ற திறமைகளைக் கொண்டிருந்த ராதா தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற்ற சிறப்புக் கொமாண்டோ அணியிற்கும் பயிற்சி அளித்தார். பயிற்சியாளனாக இருந்த ராதா லெப்.கேணல் விக்டருடன் மன்னார்க் களம் நோக்கிச் சென்று சாதனைகள் செய்யத் தொடங்கினான். மன்னார் காவல்துறை நிலையத் தாக்குதலில் ராதாவின் திறமையை விக்டர் பல இடங்களிலும் குறிப்பிடுவது வழக்கம்.

விக்டர் வீரச்சாவடைந்த பின் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாகப் பொறுப்பேற்ற ராதா உலகில் கண்ணிவெடியால் தகர்க்கப்படாதென புகழ்பட்ட "பவள்" கவச ஊர்தியைத் தகர்த்து விடுதலைப்புலிகளின் தொழில்நுட்பத் திறனை உலகிற்குக் காட்டினார்.

கேணல் கிட்டு அவர்கள் காலை இழந்த பின் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற ராதா குறுகியகால இடைவெளியில் குரும்பசிட்டி படைமுகாம், மயிலியதனை படைமுகாம், காங்கேசன்துறை காபர்வியூ படைமுகாம் என பல முகாம்களைத் தாக்கிப் பல வெற்றிகளைக் குவித்தார். பல முனைகளிலும் திறமை கொண்ட இந்த நடமாடும் பல்கலைக்கழகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால்..... இது தலைவர் உட்பட எல்லோர் மனதிலும் எழும் கேள்வி. "சண்டைக்கு எண்டு போய் சாகிறதெண்டால் ஐ சே எங்களுக்கெண்டு ஒரு றவுண்ஸ் அல்லது ஓர் செல் துண்டு இருக்கு அது வந்தால் தான் சா வரும். இல்லையெண்டால் ஒரு போதும் சாகேலாது I say" இது ராதா போராளிகளைப் பார்த்து அடிக்கடி கூறும் வசனம். ஆம் அவர் கூறியது போல் 20-05-1987ல் அவரைத் தேடி எதிரி ஏவிய குண்டொன்று அவரது மார்பினைத் துளைத்தது. ஹரிச்சந்திரா என்ற ராதா காவியமாகி ஆண்டுகள பல தாண்டிய போதும் அவரது நினைவுகள் எம் மண்ணில் இருக்கும். ராதாவின் சாதனைகளில் இன்னும் ஊமையாய் இருக்கும் உண்மைகள் சில, எம் தேசம் மீண்ட பின்பே பேசப்படும்.

லெப் கேணல் ஜொனி அண்ணா


அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கேணல் கிட்டுவையும் லெப். கேணல் ஜொனியையும் அக்கால நிகழ்ச்சிகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கேணல் கிட்டு பல்துறை ஆற்றலாளராக திகழ்ந்ததில் பக்கத்துறையாக விளங்கியவர்களில் ஜொனி குறிப்பிடத்தக்கவர்.

பருத்தித்துறை புலோலியில் சாரையடி என்ற ஊரில் 21.5.1962 இல் பிறந்தார். அவரது இயற்பெயர் விக்கினேஸ்வரன் விஜயகுமார். பல்கலைக்கழகத்தின் விவசாயப்பீட மாணவராக இருந்தபோது 1983 ஆம் ஆண்டு போராட்டத்தில் இணைந்து கொண்டார்.

சிறுவனாக இருந்தபோதே போராட்டத்திலே இணைய முற்பட்டபோது அவரது பெற்றோர் விரும்பாததால் கொழும்பில் படிக்க வைக்கப்பட்டார்.

ஆனால் 1983 ஆம் ஆண்டில் சிங்களவர்களால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையைத் தொடர்ந்து போராட்டத்தில் இணைந்து கொண்டார். அக்கால கட்டத்தில் இந்தியா அதன் நலன்சார்ந்து தமிழீழ விடுதலைக்காகப் போராடிய அமைப்புகளுக்கு பயிற்சியைத் தர முன்வந்தது.

விடுதலைப் புலிகளின் 200 பேருக்கு 2 பிரிவுகளாகப் பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சிக்காக ஜொனி இந்தியா சென்ற போது அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை. தொலைத் தொடர்புத்துறையில் பயிற்சி பெற்று நாடு திரும்பினார்.

மன்னாரிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார். அப்போது யாழ். குடாநாடு கட்டுப்பாட்டில் இல்லை. படையினர் எந்தநேரமும் எங்கும் செல்லலாம் என்ற நிலை இருந்தது.

ஒருமுறை வல்வெட்டித்துறை கெருடாவிவிலில் ஜொனியை படையினர் சுற்றிவளைத்து அடையாள அட்டையைக் கேட்டுள்ளனர். அப்போது தனது கைத்துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

மேஜர் வாசுவும் ஜொனியும் படையினரை எங்கேயாவது தாக்க வேண்டும் என்ற முனைப்போடு இருந்தனர். கைக்குண்டுகளோடு படையினரைத் தேடித் திரிந்தனர். இவர்களை வளர்த்து விடுவதில் கேணல் கிட்டு பெரிய பங்காற்றினார். மேலும் ஜொனியை தனக்கு அடுத்த நிலை தளபதியாகவும் உருவாக்கி வைத்திருந்தார்.

படைநிலைகளைப் போய்ப் பார்ப்பது, போராளிகளைச் சந்திப்பது, களநிலைகளை அறிவது, போராளிகளின் நலன் பேணுவது, பயிற்சி வழங்குவது, புதிய புதிய படைக்கட்டமைப்பை உருவாக்க ஊக்கப்படுத்துதல், எமது கட்டமைப்புகளாக அப்போது இருந்த தும்பு தொழிற்சாலை, வெடிபொருள் உற்பத்திசாலை ஆகியவற்றை நேரில் பார்வையிடுவது என்று ஜொனி பல பணிகளைச் செய்து வந்தார்.

ஜொனியைப் பொறுத்தவரை யாழ். குடாநாட்டில் அவருக்கு ஒவ்வொரு இடமும் தெளிவாகத் தெரியும். எல்லா இடம் பற்றியும் அவர் தரவுகளை வைத்திருந்தார். பொதுவாக கேணல் கிட்டு இல்லாத போது யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதல்களை ஜொனி வழிநடத்தினார். அந்தத் தாக்குதல்களில் கலந்து கொண்டார்.

10.4.85 அன்று யாழ்ப்பாணம் காவல்துறை நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான வேவை ஜொனியும் லெப். வாசனும் செய்தனர்.

19.12.84 அன்று தெல்லிப்பழை கட்டுவன் வீதியில் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியவர் லெப். வாசன். இதில் கேணல் ஆரியப்பெருமா, 8 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர்.



ஒருபுறம் சதுப்புநிலத்தையும் யாழ்ப்பாண டச்சுக் கோட்டையையும் மற்றொரு புறம் துரையப்பா விளையாட்டரங்க முன்புற பரந்தவெளி வியாட்டுத்திடலையும் கொண்டிருந்தது சிறிலங்கா காவல்துறை. கோட்டையிலிருந்தும் அதற்கு இலகுவாக உதவி கிடைக்கக்கூடியதாக இருந்தது.

அதைத் தவிர்த்து நூறு அடி தொலைவில் குருநகர் முகாம் இருந்தது. கோட்டை, குருநகர், யாழ். காவல்துறை மூன்றும் ஒன்றுக்கொன்று தேவையான போது உதவிகளைப் பெறுகின்ற வகையில்தான் இருந்தது. அத்துடன் இந்த யாழ்ப்பாண காவல்துறை நிலையம் பலப்படுத்தப்பட்டிருந்தது. அகழிகள் வெட்டப்பட்டு முட்கம்பி வேலிகள் போடப்பட்டிருந்தன. அதைச் சுற்றி கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. நடுவிலே 60 அடி உயர பாதுகாப்புக் கோபுரம் அமைக்கப்பட்டு இரவும் பகலும் காவல் காக்கப்பட்டது.

ஆனால் காவல்துறை நிலையம் மீது வெற்றிகரமாகத் தாக்குதல் நடத்தி அதை கைப்பற்றினர். இதற்கு ஜொனி மற்றும் வாசனின் பங்களிப்பு அளப்பரியது.

காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர் குருநகர் முகாம் மூடப்பட்டது. காவல்துறை நிலையம் கைப்பற்றப்பட்ட பின்னர்தான் யாழ்ப்பாணம் படிப்படியாக எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

ஒருமுறை கைக்குண்டு வெடித்தபோதும் கட்டுவன் சமரிலும் இந்தியப் படையுடன் சுதுமலையில் நடந்த தாக்குதலின் போது பாரூக் என்ற பெயரிலுமாக 3 முறை விழுப்புண் பெற்றவர் ஜொனி.

கட்டுவன் தாக்குதலின் போது நெற்றியின் உள்சென்ற ரவை காதின் வழியே வெளிவந்தது. அதனால் நெற்றியில் அவருக்கு மென்மையான தோலாக இருந்தது.

இந்தியாவுடனான சண்டையில் காயம்பட்ட பின்னர் அவர் இந்தியாவுக்குச் சென்றுவிட்டார். ஆனால் 1987 இல் தேசியத் தலைவர் அவர்கள் தமிழீழம் திரும்பிய போது ஜொனியின் ஆற்றலைக் கண்டு அவருக்கு 90 பேர் கொண்ட அணியைத் தந்து ஒரு தாக்குதல் அணியாகப் பயிற்சி தந்து தாக்குதலில் ஈடுபடும்படி பணித்திருந்தார். முதன் முதலில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் அணியாகக்கூட அது இருக்கலாம்.

இந்த அணியிலே சிலரை அச்சுவேலிக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு தாக்குதலை மேற்கொண்டு 6 படையினரைக் கொன்று அங்கிருந்த படைக்கலன்களை ஜொனி கைப்பற்றி வந்தார்.

அதன் பின்பு அவர் இந்தியா சென்றுவிட்டார். இந்தியாவுடனான எங்கள் போர் வெடித்த போது ஜொனி இந்தியாவிலே இருந்தார்.

ஜொனி அங்கே இருந்தபோது மிகப்பெரிய அச்சுறுத்தலை இந்திய அரசு கொடுத்துவந்தது. மிக விரைவிலே நாங்கள் புலிகளை அழித்துவிடுவோம் - தேசியத் தலைவரைக் கைது செய்வோம் அல்லது கொல்வோம் - அருகாமையில் சென்றுவிட்டோம் - நாளை பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பொய்களைக் கூறிக் கொண்டு இருந்தனர். ஆனாலும் அவர்கள் எட்டிய தொலைவில் இல்லைதான். மிக அருகாமையில்தான் இருந்தனர்.

தேசியத் தலைவரைப் பொறுத்தவரை இந்தப் போராட்டத்தை எந்த வகையிலும் விட்டுக்கொடுப்பதில்லை உறுதியோடுதான் இருந்தார்.

தான் இந்தப் போராட்டத்திலே கொல்லப்பட்டால் தன்னை தீருவிலிலே கொண்டு போய் எரிக்கும்படியும் போராளிகளுக்குக் கூறியிருந்தார். நானிருக்கும் வரை இந்தப் போராட்டத்தை நடத்துவேன். எனக்குப் பின்னால் வருகிற தலைவர்கள் அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கட்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரை இந்தியா கொலை செய்தபோது தேசியத் தலைவர்கள் மிகவும் சினமடைந்து இருந்தார். அவர்கள் உயிரைத் தற்கொடையாக அளித்து வீரச்சாவைத் தழுவியபோது திட்டமிட்டு ஏமாற்றி கொலை செய்ததாக மிகவும் சினத்தோடு இருந்தார் தலைவர்.

அவர் உறுதியாக இருந்ததை அவருடன் இருந்தவர்கள் அறிவார்கள். ஆனாலும் அவர்கள் ஒருவித அச்சத்தோடு இருந்தார்கள். தேசியத் தலைவர் உயிருக்கு ஆபத்து வந்துவிடும். எனவே இந்தியா சொல்கிறபடி ஒரு சில படைக்கலங்களைத் தந்தாவது அமைதியை நாங்கள் பேசலாம் என்று அவர்கள் எண்ணினார். இந்த வகையில் கேணல் கிட்டு ஜொனியை ஒரு சமாதானத் தூதுவனாக இந்தியா அனுப்பி வைத்தார்.

நெடுங்கேணியில் இந்திய வானூர்தியில் வந்திறங்கி அங்கிருந்து மறைமுகமாக விசுவமடு கரைக்கு அழைத்து வரப்பட்டார்.

மணலாற்றுக் காட்டிலிருந்து என்னை ஜொனியை அழைத்துவர தலைவர் அனுப்பினார். மேஜர் தங்கேசுடன் நான் அவரை விசுவமடுவில் சந்தித்தேன்.

இரண்டு நாட்கள் நான் ஜொனியுடன் விசுவமடுவில் இருந்தேன். அப்போது ஜொனி, தலைவரின் உயிருக்கு எந்தநேரமும் ஆபத்து வரப்போகிறது. எனவே நீங்கள் ஏதோ ஒருவகையில் அமைதியைப் பேசி அதன்பிறகு ஒரு நிலை எடுக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருக்கு இங்குள்ள நிலைமைகளைச் சொன்ன போது, அமைதி ஏற்பட சாகுவரை உண்ணாநிலைப் போராட்டத்தை இந்தியாவில் நடத்துவேன் என்றும் ஜொனி கூறினார். பிறகு நான் ஒரு இழுபறியுடன்தான் மேஜர் தங்கேசுடன் புறப்பட்டோம். போகின்ற வழியில் இந்த இந்த இடங்களைச் சுட்டிக்காட்டி அங்கு இந்திய பாசறைகள் அமைக்கும், அங்கு உங்கு சுற்றி வளைக்கும் உணவுப் பிரச்சனை வரும் - தண்ணீர் பிரச்சனை வரும் என்றெல்லாம் கூறினார். அவர் கூறியதுபோல் பின்னர் இந்தியப் படை அந்த அந்த இடங்களில் எல்லாம் பாசறைகள் அமைத்தது உண்மைதான்.

நான் அவரைக் கூட்டிச் செல்லும்போது, "தலைவரைச் சந்தித்து பெரும்பாலும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் - சொல்வீர்களா என்று தெரியவில்லை - இருந்தாலும் சொல்லுங்கள்" என்று சொன்னேன்.

நாங்கள் பாசறையை அடைந்த போது இரவு 11.30 மணி இருக்கும். அவர் உறங்கிக் கொண்டிருந்தார். வாசலில் ஜொனியைப் பற்றி சொன்னேன். காலையிலே சந்திக்கிறேன் என்று மெதுவாகத்தான் சொன்னேன். அப்போது தலைவர் உள்ளிருந்து கேட்டார், ஜொனி வந்தாச்சா? யோகி வந்துள்ளாரா? என்று.

அந்தக் காலகட்டத்தில் மெல்லிய ஒலிக்குக் கூட விழித்து விழிப்பாக இருப்பார். அதேபோல் யாராவது காட்டைவிட்டு வெளியே போய்விட்டால் எப்போதும் விழிப்பாக இருக்கிற பழக்கம் உண்டு. அந்த வகையில் உறங்கிக் கொண்டிருந்தபோதும் தலைவர் விழிப்பாகத்தான் இருந்தார்.

தலைவருடன் 2, 3 நாட்கள் ஜொனி இருந்தார். நாற்காலி, மிசையம்(மேசை) எல்லாம் அப்போது இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு தரையில்தான் இருப்போம். சப்பாணி கட்டிக் கொண்டு தலைவருக்கு முன்னாள் ஜொனி பேசிக் கொண்டிருந்தார். நாங்களும் பலருமாக அந்த இடத்துக்குச் சென்று வருவதுண்டு.

பின்னர் ஜொனி அங்கிருந்து இந்தியா செல்லத் தயாராக இருந்தபோது சூட்டி என்பவர் அழைத்துச் செல்வதாக இருந்தது. அப்போது ஜொனியை ஒரு பக்கமாக அழைத்துச் சென்று கேட்டேன், "என்ன நடந்தது? எல்லா விசயத்தையும் சொல்லிவிட்டீர்களா?" என்று கேட்டேன். அவர் வாயைப் பொத்திக் கொண்டு சொன்னார்.."எதுவுமே கதைக்காதீங்க.. நான் ஒன்றுமே கதைக்கலை. அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தேன்" என்றார். "என்ன முடிவு?" என்று கேட்டேன்.

தலைவர் கூறினார், "இந்திய படை அழைத்துதான் இங்கு வந்ததாக சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் திரும்பிப் போய்விட்டு தலைமறைவாகி இங்கே வாருங்கள். பெரிய பயிற்சி முகாமுக்கு பயிற்சி கொடுக்க வேண்டியிருக்கிறது. யாழ். குடாவை கைப்பற்ற வேண்டியுள்ளது. அதைச் செய்வதற்கான ஆயத்தத்துடன் வாருங்கள்" என்றார். "நான் போகிறேன். திரும்பி அந்த ஆயத்தங்களோடுதான் வருவேன்" என்றார் ஜொனி.

இடையிலேயே ஒரு தளம்பல் நிலையில் ஜொனி இருந்தபோதும் இங்கே தலைவரைச் சந்தித்த போது மிக உறுதியோடு மீண்டும் சென்று இங்கே திரும்பி பெரிய அளவில் பயிற்சிகளை தந்து போராளிகளை வளர்த்து யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றுவதற்கான நம்பிக்கையோடுதான் சென்றார்.

ஆனால் அவர் செல்லும்போது தேராவிலுக்கு அண்மையில் இந்தியப் படையின் சுற்றி வளைப்பில் அவர் கொல்லப்பட்டார். மிகப் பெரிய சிறந்த பண்பான உயர்ந்த ஒரு போராளியை நாங்கள் இழந்தோம்.

அவரைப் பொறுத்தவரை யாழ். குடாநாடு என்பது அவருக்கு வீடு போல். எல்லா இடமும் அவருக்குத் தெரியும். 1983 ஆம் ஆண்டிலிருந்து அவர் வீரச்சாவடைகின்ற வரை அவரது பங்களிப்பு இருந்தது.

போராளிகளால் மட்டுமல்ல- பொதுமக்களாலும் மதிக்கப்படுகிற ஒரு மனிதனாக ஜொனி வாழ்ந்தார்.

இத்தனை திறமைகொண்ட சிறந்த வீரனை நாங்கள் இழந்து நின்றோம். இருந்தபோதும் எங்கள் போராட்டம் தொடருகின்றது. அவர்களை நினைவு கூருவது எல்லாமே அவர்கள் விட்டுச் சென்ற பணியை தொடர வேண்டும் என்பதை நினைவூட்டவே.

யோகரத்தினம் யோகி
வரலாற்றுத்துறைப் பொறுப்பாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.
(16.03.2006 அன்று லெப்.கேணல் ஜொனி அவர்களின் 18 ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி "புலிகளின் குரல்" வானொலியில் ஆற்றிய நினைவுரை)

முல்லைக் கடலில் காவியமான கடற்கரும்புலிகள்


08.12.1999 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக கடற்புலிகள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினை இடைமறித்து மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகளின் நினைவு நாள் இன்றாகும்.

இத்தாக்குதலில் லெப்.கேணல் கார்வண்ணன், மேஜர் யாழ்வேந்தன், மேஜர் இசைக்கோன் மற்றும் கப்டன் கானவன் ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இக்கரும்புலி வீரர்களின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு கடுமையாக சேதமடைந்ததுடன் அதிலிருந்த கடற்படையினர் நால்வர் கொல்லப்பட்டும் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

விடுதலைப் போருக்கு வலுச்சேர்க்க கொண்டுவரப்பட்ட பொறுமதி வாய்ந்த போர்க் கருவிகள் மற்றும் வெடிபெருட்கள் இக்கரும்புலி வீரர்களின் உயிர்க்கொடையினால் பத்திரமாகக் கரைசேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழீழத் தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை வெடியாக்கி வித்தாகிப் போன இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"