தமிழீழத் தேசியக்கொடி




தேசியக்கொடி என்பது ஒரு நாட்டின் தேசிய இனம், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாக விளங்குகின்றது. உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன.


ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப...்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடங்குகின்றன.


தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் 1990ம் ஆண்டு அறிவிக்கப் பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990ம் ஆண்டு நவம்பர் 21ம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் அவரது பாசறையில் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பெற்றது.நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முறைப்படி கொடிவணக்கம் செலுத்தி, கொடிவணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.

தமிழீழத் தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன.


தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.

தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சமன்மையும், சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் தமிழீழ அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.


விடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப் போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும். அசையாத நம்பிக்கை வேண்டும். தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.


விடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது..

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"