முதல் வித்து லெப்.சங்கர்


ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத்தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது.

அவ வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டுமதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது.

படுகாயமுற்ற நிலையிலுங்கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். தோழர்களிடம் தன் கைத் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டு கீழே விழுந்து மூர்ச்சையாகிறான். வயிற்றில் ஏற்பட்ட காயத்திலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிமையினால் இரும்பையொத்த அவனது கட்டுடல் சோர்வடைகிறது.

விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகுமூலம் கடல் மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க (27-11-1982 அன்று மாலை 6.05 மணிக்கு) அந்த இளைஞன் இயக்கத்தில் முதற்களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். (இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது.)
அவன்தான் வடமராட்சி கம்பர் மலையைப் பிறப்பிடமாக கொண்ட லெப்டினன்ட் சங்கர். சிங்கள இராணுவப்படையினர் வலைவிரித்துத் தேடிவந்த செ. சத்தியநாதன். சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கெரில்லா வீரன். தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்..

ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்துவிடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புகளிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரசபடைகளின் தீவிரக் கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்றுகொண்டிருக்கும் அவன் விழிகள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும்கூட ஒரு கெரில்லா வீரன் என்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கைகளில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்திவிட்டுத் தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப்போராளிகள் எனப்படுபவர்கள், ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிக்கையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப்போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாக, தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பக் கட்டங்களில் விடுதலைப்போராளிகளை ஆயுதங்களோடு அரச படைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானது, அரச படைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்துவிடுவதில் நம்பிக்கையை ஊட்டி, அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கிவிட முடியும் என்று பாசிச சர்வாதிகாரி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்தபோது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கெரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும்வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஓயாது என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத்திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே இழுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்த்த லாவகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறிவைக்கும் அவனது சாதுரியம் அலாதியானது. நெல்லியடியில் அரச படையினர் பீதியுற்ற நிலையில், சங்கர் கால்களை அகலவிரித்து பக்கவாட்டில் நின்று அரச படையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின்மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கெரில்லாத்தாக்குதலின் வெற்றிக்கு சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் பொலிஸ் நிலையங்கள் உஸார்ப்படுத்தப்பட்டிருந்தநிலையில், மாடிக்கட்டிடத்தோடு, பிரதான வீதியிலிருந்து சற்றுத்தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலூடாகத் தாக்குதல் நடத்துவது என்பது விஸப்பரீட்சைதான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் போன்ற போராளிகளின் முன்னே அபாயங்களும், தடைகளும் என்ன செய்துவிடமுடியும்? ஜி.3 சகிதம் படுத்துக்கிடந்த சங்கர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தாக்குதலில் ஒரு பகுதிக்குப் பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் இப்பகுதி அரச படைகளை ஸ்தம்பிக்கச் செய்தது..

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக்கட்சி (ஜெயவர்த்தனா கட்சி) உறுப்பினர் புன்னாலைக்கட்டுவன் தம்பாபிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகித்தான்.
எந்தவிதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கெரில்லா தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு, எதிரிப்படைகள் அந்த இடத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடன் அதிக நிதானத்துடனும் வாகனத்தைச் செலுத்துவதில் சங்கர் வல்லவன்.
சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும்போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பணிவோடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு வகித்து வந்தான்.
தமிழீழ விடுதலையைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேதான் வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழுமூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தா ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனது மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நிற்கிறார்கள்.

இயக்கத்தலைவர் பிரபாகரனின் அரசியல் வழி காட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற-தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளால்தான் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும்தறுவாயிற்கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவிலலை. தம்பி தம்பி என்றுதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப்போராளிகளும் கண்கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.
ஒரு உண்மை மனிதனின் கதை என்ற ரஸ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக்கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம்தான்.

எல்லாளன் நடவடிக்கை


எல்லாளன் நடவடிக்கை”
22-10-2007
‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும்.

உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள்.

வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.” கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. எல்லாளன் நடவடிக்கை 21 வீரவேங்கைகள் விபரம்

எல்லாளன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைக்கற்களை உடைப்பதற்கான ஒவ்வொரு முயற்சியின்போதும், கரும்புலிகள் தம்மை ஆகுதியாக்கியிருக்கிறார்கள்.
இந்தவகையில்தான் வன்னிமண்ணை போரிருள் சூழத் தொடங்கியபோது அதனை முறியடித்து ஒளியேற்றுவதற்கான பெரும்பணியை நிறைவேற்றுவதற்காக லெப்.கேணல் இளங்கோ தலைமையில் 21 வீரர்கள் சிறப்பு நடவடிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
லெப்.கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது.

எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும்.

உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது.

சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார்.

மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன.

வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான்.

வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர்.

அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார்.

பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். லெப்.கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது.

அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது.

பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது.

இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு, கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன்,
மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன்,
மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன்,

கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார்,
கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன்,
மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன்,
கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார்,
கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார்,
கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ்,
கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ்,
லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன்,
கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன்,
மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி,
கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி,

கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா,
கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர்.
அனுராதபுர மண்ணில் பகைவரின் வானூர்திகளை அழித்து வன்னி முற்றுகைக்கான முதலடியைக் கொடுத்த இந்த வீரமறவர்களின் தியாகத்தை வீண்போகாமல் காக்கப்பட வேண்டும். எல்லாளன் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்

முல்லைத்தீவின் முத்து எங்கள் லெப் கேணல் புரச்சி அண்ணா


லெப் கேணல் புரச்சி/குபேரன் அண்ணாவிற்க்கும் அவருடன் அதேநாளின்
வீரச்சாவடைந்த ஏனய மாவீரர்களுக்கும் ஈழவளன் தளம் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகிறது

கரும்புலி லெப் கேணல் பூட்டோ





























இந்திய இராணுவமும் ஒட்டுக்குழுக்களும்சேர்ந்து தேசபக்தர்களை வேட்டையாடிக் கொண்டிருந்த காலம். மன்னார் மாவட்டத்தின் பாலக்குழிப் பிரதேசத்தில் யூலியனின் தந்தை இந்திய இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பாடசாலைக்குள் புகுந்த இராணுவத்தினர் யூலியனைக் காட்டித்தரும்படி துப்பாக்கி முனையில் அச்சுறுத்துகின்றனர். அன்று பாடசாலை செல்லாத யூலியன் தப்பித்துக் கொள்கிறான். உடனடியாக முஸ்லிம் குடும்ப நண்பர் ஒருவரின் உதவியுடன் மறைமுகமாக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். அங்கிருக்கும் நகைக்கடை ஒன்றில் தற்காலிகமாகப் பணிக்கு அமர்த்தப் படுகின்றான். முதல்நாள் கடைக்குச் செல்கிறான். அங்கிருக்கும் கதிரையொன்றில் அமர்ந்திருக்கின்றான்.

அங்குவந்த முதலாளி “கடைக்கு வேலைக்கு வந்தனி எப்படிக் கதிரையில் அமர்ந்திருக்கலாம்?” என ஏசுகின்றார்.

“நான் எனது ஆசிரியர்களுக்கு மட்டும்தான் எழுந்து மரியாதை கொடுக்கிறனான்” எனக் கூறியவன் எவருடைய உதவியுமின்றி மீண்டும் தாயிடம் வந்து சேருகின்றான்.

“அம்மா இப்படி அடிமையாகச் சிறுமைப்படுவதிலும் பார்க்க நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என அனுமதி கேட்கின்றான்.

அன்னை மௌனமாக இருக்கின்றாள். அங்கிருந்த உறவினர்கள் அழுகின்றார்கள். “நீங்கள் அழுதுகொண்டு இருக்கையில் நான் இயக்கத்திற்குப் போகமாட்டன். ஆனால் விரைவில் போயிருவன்” என்றவன் ஒருநாள் இயக்கத்தில் இணைந்துவிட்டான்.

உயிராபத்துக்களை உதாசீனம் செய்து, போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மிகவும் ஆதரவான வீட்டிலிருந்து, இவன் இயக்கத்தில் இணைந்தது, முகாம் பொறுப்பாளரைச் சங்கடத்திற்கு உள்ளாக்கியது.

“நீ வீட்ட திரும்பிப் போ” எனக் கூறுகின்றார்.

“இல்லை நான் அம்மாவிட்ட சொல்லிப் போட்டுத்தான் வந்தனான்.”
எனப் பதிலளிக்கின்றான்.

இதனை உறுதிப்படுத்த பொறுப்பாளர் தாயைச் சந்திக்கின்றார். மகனின் கூற்றை உண்மையாக்க விரும்பியவள் “ஓம் என்னட்ட சொல்லிப் போட்டுத்தான் வெளிக்கிட்டவன்” எனக் கூறுகின்றாள்.

முழுமையான போராளியாக மணலாற்றுக் காட்டினுள் இவனது போராட்ட வாழ்க்கை பூட்டோ எனும் பெயருடன் தொடங்கியது. காட்டு வாழ்க்கை, கடினப் பயிற்சிகள் கடந்து வேவுப்புலியாகப் பரிணமிக்கின்றான். காடுகளையும் எதிரிமுகாம்களையும், காவலரண்களையும் கால்களால் நடந்து அளந்து கணிக்கின்றான். ஒரு நாள் ஏழு பேர் கொண்ட வேவு அணியை வழிநடத்தியவாறு, வனப்பாதுகாப்பு வலயத்தின் சுற்றயல் பகுதியை கண்காணித்துக் கொண்டு வருகின்றான். ஒரு இடத்தில் சூழலுக்குப் பொருத்தமற்ற முறையில் புற்கள் மடிந்திருப்பதை அவதானிக்கின்றான். எதிரி தமது பகுதிக்குள் புகுந்துவிட்டதாக கூறுகின்றான். மற்றவர்கள் அதனை மறுதலிக்கின்றனர். இவனோ அப்பகுதியில் அண்மையில் தான் புதைத்து வைத்த மிதிவெடியொன்றைத் தோண்டி எடுக்கின்றான். எதிரி மீண்டும் அப்பாதையைக் கடப்பானாயின் எங்கு பாதம் வைப்பான் என்பதைக் கணிக்கின்றான். அவ்விடத்தில் மிதிவெடியை வைத்து உருமறைத்து விடுகின்றான். தொடர்ந்து நகர்கின்றார்கள். சிறிது நேரத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்கின்றது. ஏனையவர்கள் காட்டு விலங்கு ஏதும் மிதிவெடியில் சிக்கியிருக்கும் என கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனை மறுதலித்தவன் அவர்களையும் அழைத்துக் கொண்டு அவ்விடம் திரும்புகின்றான். அங்கு இரத்தம் சொட்டியபடியே இராணுவப் பாதணியுடன் துண்டிக்கப்பட்ட கால் ஒன்று கிடக்கின்றது. பின்னர் வந்த நம்பகமான தகவல் மூலத்திலிருந்து தெரியவந்தது. இவர்களுடைய காட்டுமுகாமைச் சுற்றிவளைத்து தாக்கியழிப்பதற்காகத் தங்களது வேவு தகவல்களை இறுதியாக உறுதி செய்ய வந்த இராணுவ அதிகாரி ஒருவர்தான் மிதிவெடியில் சிக்கியது என்பது. இவனது சமயோசிதச் செயற்பாட்டால் பல போராளிகளின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

இவ்வாறான பல பதிவிலுள்ள, பதிவில் இல்லாத நிகழ்வுகளின் ஊடாக இவன் ஒரு இராணுவ விற்பன்னனாக வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. மணலாறு மாவட்டத்தில் நடாத்தப்பட்ட பல்வேறு முகாம் தாக்குதல்கள், பதுங்கித் தாக்குதல்கள் என்பனவற்றிற்கு வேவு எடுத்தும், அணிகளை வழிநடத்தியும் போராட்டத்திற்கான தன் பங்களிப்பை மேம்படுத்திக் கொண்டான். இக் காலகட்டத்தில் ஒரு சண்டையில் தனது இடதுகைப் பெருவிரலையும் இழந்திருந்தான்.

இயல்பாகவே இவனிடம் இருந்த சித்திரம் வரையும் ஆற்றலால் இவன் வரைபடப் பகுதிக்குள் உள்ளீர்க்கப் பட்டான். வேவுத்தகவல்களை வரைபடங்களாக்கி துல்லியமான விபரங்களைக் கொடுத்து பிரதம தளபதிகளின் தாக்குதல் திட்டமிடல்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தான். இயற்கையாகவே இவனிடம் இனிமையாகப் பாடும் திறனும், கவிதை யாக்கும் வல்லமையும் கைகூடியிருந்தது. வனமுகாம்களில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்குகொண்டு கலையாற்றல்களை வெளிப்படுத்தி, போராளிகளை மகிழ்விக்கவும் செய்தான். இயக்கத்தில் கலையரசன் எனும் பெயரையும் பெற்றான்.

சமகாலத்தில் போராயுதத் தளபாடங்களையும், நவீன இராணுவ உபகரணங்களையும் தன்னுடன் பழக்கப் படுத்தினான். அவற்றின் உச்ச பயன்பாட்டைப் பெறும்வகையில் தன்னை தகவமைத்துக் கொண்டான். தொடர்ந்து பூநகரி, கொக்குத்தொடுவாய் இராணுவ முகாம்களின் வேவுகளை எடுத்து அவற்றின் மீதான தாக்குதல்களை உறுதிப் படுத்தினான். இப்பொழுது இவன் பல அணிகளை வழிநடத்தும் அணித்தலைமைப் பொறுப்பை வகிக்கத் தொடங்கியிருந்தான்.

சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை தொடர யாழ்நகரம் கைவிடப்பட, இவன் உள்நின்ற போராளிகளுடன் கலந்திருந்தான். இவனது போராவலைத் தீர்ப்பதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்திருந்தது. ஒருமுறை நடவடிக்கையின் நிமிர்த்தம் பண்ணைக் கடலினூடு நீந்திக் கொண்டிருந்தான். அப்பொழுது அழற்சியை ஏற்படுத்தக்கூடிய, நச்சுக் கடற்தாவரம் ஒன்றினால் தாக்கப் பட்டிருந்தான். உடல் முழுவதும் தடித்து மூச்சு விடுவதையும் சிரமம் ஆக்கியது. ஒருவாறு சிரமப்பட்டு கரையொதுங்கியவன் ஒருவாரத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் களம் சென்றான்.

முல்லைத்தீவுச் சமர் தொடங்கிவிட்டது.
“பூட்டோ… பூட்டோ!” என தொலைத் தொடர்பு சாதனத்தில் தளபதி பால்ராஜ் அழைப்பது கேட்கின்றது. ஈழத் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் திருப்புமுனைத் தாக்குதல் அது. நாங்கள் வென்றே ஆகவேண்டும் சர்வதேசத்திற்கான தமிழீழத்தின் கடற்பாதை திறக்கப்பட்டே ஆகவேண்டும். முகாம் துடைத்தழிப்பை பூரணப்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேவில் வரைபடத்துறையில், தாக்குதல் அனுபவங்களில், நெருக்கடி நேரங்களில் சரியான முடிவெடுக்கும் வல்லமையைப் பலமுறை நிரூபித்திருந்த பூட்டோ களநிலை அவதானிப்பாளராகவும், டாங்கிக்கான ஒருங்கிணைப்பாளராகவும் களத்தினுள் இறக்கப் பட்டிருந்தான்.

இவனது செயற்பாட்டால் பகைமுகாம் வீழ்த்தும் முயற்சி துரிதப்படுத்தப் பட்டது. பெரும்பாலான முகாம் பகுதிகள் வீழ்ந்து விட்டன. ஒரு கட்டடத்தினுள் பல இராணுவத்தினர் ஒளிந்திருந்து தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களைச் செயல் முடக்கம் செய்ய வேண்டும். பூட்டோ டாங்கியைத் தாக்குதலுக்கு ஆயத்தம் செய்து அதன் மூலம் சில சூடுகளை வழங்க ஆணையிட்டான். பகைவன் பதுங்கியிருந்த கட்டடம் அப்படியே தகர்ந்து இறங்கியது. பெரும்பாலான இராணுவத்தினர் கொல்லப்பட்டு விட்டனர். தொடர்ந்து தாக்குதலை நடாத்தி வெற்றியை உறுதிப்படுத்தும்படி களமுனைத்தளபதி கட்டளையிட்டார்.

அவ்வாறு செய்ய முற்படுகையில் அவனது உள்ளுணர்வு அவனை எச்சரித்தது. மீண்டும் சூழலை அளவெடுக்கின்றான். மின்னல் என பொறி தட்டியது. டாங்கிக்குப் பக்கவாட்டாக இருக்கும் மண்ணரணில் இடைவெளி தென்பட்டது. எக்காரணம் கொண்டும் டாங்கி இழக்கப்பட முடியாத இயக்கத்தின் இராணுவச் சொத்து. டாங்கியை வேகமாகப் பின்னகர்த்தி பாதுகாப்பிடம் செல்ல உத்தரவிட்டான். டாங்கி சடுதியாகப் பின்னகரவும் குறித்த மண்ணரன் இடை வெளியூடு ஆர்.பி.ஜி கணை ஒன்று எகிறி வந்து இலக்குத் தவறித் தாண்டிச் செல்லவும் சரியாக இருந்தது. கணநேர முடிவில் இயக்கத்தின் இராணுவப் பலங்களில் ஒன்றைப் பாதுகாத்து தொடர்ந்த பல வெற்றிகளுக்கு அடிப்படைக் காரணமாகின்றான்.
ஓயாத அலை 1 வெற்றியில் தமிழீழம் திளைத்திருந்தது. தமிழர்கள் தலைநிமிர்ந்து நடக்கத் தொடங்கினர். சிங்களம் தோல்விக்குச் சப்பைக்கட்டுக் கட்டிக் கொண்டிருந்தது. அவ்வேளை முல்லைத்தீவு முகாமில் எடுக்கப்பட்ட பொருட்களின் தவறான பிரயோகம் சம்பந்தமாக பூட்டோ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான். அவனை அறிந்திருந்த அனைவருக்குமே விளங்கியிருந்தது. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என நிரூபிக்கும் என. ஆனால் அதுவல்ல இங்கு முக்கியம், அர்ப்பணிப்பும் செயற்திறனும் உள்ள அப்போராளிக்கு இச்செயல் மனவுடைவை ஏற்படுத்தலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகவே சம்பவங்கள் நடந்தேறின. விசாரணை முடிவு அவனைக் குற்றமற்றவன் என்றது.

தொடர்ந்து என்ன செய்யப் போகிறீர்கள்? விரும்பினால் தண்டனை இல்லாமல் வீட்ட போகலாம் என பொறுப்பாளர் தெரிவித்தார். மெலிதாகச் சிரித்தான். ‘நான் தொடர்ந்து இயக்கத்தில் இருக்கிறன்’ எனக் கூறினான். அப்பொழுது பொறுப்பாளர் அப்ப சரி வரிப்புலி சீருடையைப் போடுங்கோ அண்ணை உங்களைச் சந்திக்க வரட்டாம்”.

‘நான் தவறு செய்யமாட்டன் என்பதைத் தலைவர் நம்பினார். இதுபோதும் சாகும்வரை இயக்கத்தில் இருந்து செயற்படுவதற்கு’ என தன்னுள் எண்ணியவன் தலைவரைச் சந்தித்தபின் தொடர்ந்து களப்பணியாற்றுகின்றான். பலமாதங்களுக்கு முன்னர் கரும்புலி அணியில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்துக் கடிதம் அனுப்பியிருந்தான். அதற்கான அனுமதி கிடைத்திருந்தது. ஆபத்துக்களை கடந்து செய்யப்படும் தனது கடின உழைப்பில் மனத்திருப்தி கிடைக்காதவன் கரும்புலியாகச் செயற்படுவதில் அதனை அடையலாம் என நம்பினான்.

தொடர்ந்து கரும்புலிகளுக்கான உடல் உள உறுதிகளை உறுதிப்படுத்தும், தாங்குதிறனைப் பரிட்சிக்கும் பயிற்சிகளைப் பெற்றுத் தன்னைக் கரும்புலி அணித்தலைவர்களுள் ஒருவனாக்கிக் கொள்கிறான். இப்பொழுது கரும்புலியாகவும், வேவுவீரனாகவும் தனது அனுபவங்களை ஒருங்கிணைத்துச் செயற்படுகின்றான். வரையறைக்குட்பட்ட முறையில் முடிவெடுக்கும் அதிகாரத்துடன் எதிரி முகாம்களினுள் ஊடுருவி இலக்குத்தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். முல்லைத்தீவு வெற்றியைப்போல், பூரண வெற்றியைத் தரக்கூடிய புறச்சூழலுடன் அமைந்திருப்பது பூநகரி இராணுவத்தளம். ஏற்கனவே அதனுடன் இவனுக்கிருந்த பரீட்சயம் காரணமாக அதனை வேவு எடுக்கப் புறப்படுகின்றான். அனுபவம் வாய்ந்த வேவுப்புலிக்கு இராணுவ முகாமொன்றின் காவலரணுக்கு அண்மையாகச் சென்று அதனுள் எட்டிப்பார்ப்பதென்பது திகில் நிறைந்த விருப்பிற்குரிய செயற்பாடு ஆகும்.

தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தி ஒரு காவலரணுக்கு உள்ளே எட்டிப் பார்க்கின்றான். இராணுவ நடமாட்டத்தைக் காணவில்லை. அடுத்த காவலரணினுள்ளும் சென்று பார்க்கின்றான். அதுவும் அவ்வாறே காணப்படுகின்றது. சிறிதுநேரத்திற்கு முன்னர்வரை இராணுவத்தினர் இருந்ததற்கான தடயங்கள் காணப்பட்டன. இவனுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட்டது. மெல்ல முகாமின் உட்பகுதிக்குள் செல்கின்றான். அம்முகாமின் வெதுப்பகத்தில் நெருப்புத்தணல் காணப்படுகின்றது. ‘பாண்களும்’ அவ்வாறே கிடக்கின்றன. ஆள் நடமாட்டம் தான் இல்லை. பூரணமாக விளங்கி விட்டது. அங்கிருந்தவர்களுக்கான முன்னறிவிப்பு இன்றியே அம்முகாம் பின்வாங்கப்பட்டு விட்டது என்பது. இரவோடு இரவாக பலவாயிரம் இராணுவம், கடற்படையினர் இருந்த முகாம் வெறுமையாகி விட்டது. இது எங்களுக்குத் தெரியாமல் இருந்து விட்டது? என தன்னுள் எண்ணியவன் தொடர்பெடுத்து தனது முகாம் பொறுப்பாளருக்கு நிலைமையை அறிவிக்கின்றான். மேலும் உறுதிப்படுத்தும்படி அவர் கேட்க, தான் உறுதிப்படுத்தியவற்றைத் தெரிவித்தான். முகாம் பின்வாங்கும் முடிவெடுத்த முலோபாய முடிவுகள் எடுக்கும் எதிரித்தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தபடி வெளிவருகின்றான்.

‘ஜெயசிக்குறு’ இராணுவ நடவடிக்கை மூர்க்கமுடன் தொடர்கின்றது. அதனைத் தடம்புரளச் செய்யும் தந்திரோபாய நடவடிக்கையாகவும் போராட்டத்தின் அடுத்த கட்டப் பாய்ச்சலாகவும் கிளிநொச்சி இராணுவ முகாம் வீழ்த்தப்பட வேண்டும். இந்நடவடிக்கையின் வெற்றியை உறுதிப்படுத்தவும், வேகப்படுத்தவும் என கரும்புலிகள் போரணியொன்று ஆனையிறவு இராணுவத்தளத்தினுள் ஊடுருவியது. இவர்களின் இலக்காக ஆனையிறவு தளத்தினுள் குழப்பத்தினை ஏற்படுத்துவதன் மூலம் கிளிநொச்சி இராணுவத்தினருக்கான விநியோகத்தைத் தடுப்பது, கட்டளைகளைக் குழப்புவது என்பன அமைந்திருந்தது. கொமாண்டோ பாணியிலான உட்தாக்குதல் ஆரம்பித்துவிட்டது.
பூட்டோவினால் எதிரி முகாமின் மையத்திலிருந்த தொலைத் தொடர்புப் பகுதி செயலிழக்கச் செய்யப்பட்டது. இவனது அணித்தலைவர்கள் வீரச்சாவடைய இவனும் இடது கையில் காயப்பட்டு என்பு முறிவிற்குள்ளாகினான். இதனால் சார்ச்சர் பட்டியை இழுத்துக் கொழுவித் தன்னைத்தானே தகர்த்து அழிக்கும் முயற்சி சாத்தியமற்றுப் போனது. எனவே தப்பிக்கும் முடிவெடுக்கின்றான். உள்ளே காயமடைந்திருந்த ஏனைய வீரர்களையும் வெளிக் கொண்டுவர இவனது தலைமைத்துவம் கை கொடுக்கின்றது. கிளிநொச்சியைக் கைப்பற்றும் அத்தாக்குதல் அப்போது வெற்றியடையாமல் போனது. எனினும் பெரும்பாலான கரும்புலிகள் வெற்றிகரமாக தமது இலக்கை நிறைவுசெய்து தளம் திரும்பியிருந்தனர். கை என்பு முறிவுக்காயம் மாறுவதற்காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான். அக்காலப் பகுதியில் தன்னுடன் பணியாற்றி வீரச்சாவடைந்த கரும்புலிகள் பற்றி கவிதைகளையும், இசைப் பாடல்களையும் எழுதி வெளியிட்டிருந்தான். புலிகளின் குரல் வானொலியில் பல கவியரங்குகளில் இவன் குரல் ஒலித்திருந்தது. மீண்டும் பயிற்சிகள் எடுத்து அடுத்த தாக்குதலுக்கு தயாராகினான்.

மீண்டுமொரு முறை கிளிநொச்சி இராணுவத்தளம் தாக்கியழிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஆதரவாக இம்முறையும் ஆனையிறவினுள் ஊடுருவியிருந்த கரும்புலிகள் அணியில் பூட்டோ காணப்பட்டான். அப்பொழுது பூட்டோவிற்கு பாம்பு கடித்து விட்டது. நஞ்சு இரத்தத்தில் கலக்க மரணம் இவனை நோக்கி வந்தது. எனினும் பகை முகாமினுள் பற்றையொன்றினுள் வைத்து விசமுறிப்பு மருந்து (ASV) ஏற்றப்பட்டது. மீண்டுமொருமுறை சாவிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழீழம் ஒரு பெறுமதியான கரும்புலியை மீளப் பெற்றுக் கொண்டது. அத்திட்டம் வெற்றிபெற கிளிநொச்சி நகரம் விடுவிக்கப்பட, ஓ.அ.II வெற்றி உறுதிப்படுத்தப் படுகின்றது.

மீண்டும் கடின தொடர்பயிற்சிகளை மேற்கொள்கின்றான். அக்காலத்தில் அவசியம் தேவைப்பட்ட ஒரு வெற்றியைப் பெறுவதற்காக தலைவரின் ஆசி பெற்று நகரும் கரும்புலியணியில், இலக்கின் மீதான தாக்குதல் தொடுக்கும் பொறுப்பை ஏற்று இணைந்து கொள்கின்றான். இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு அதிஉயர் பாதுகாப்புடன் பேணப்படும் மணவாளன்பட்டை எனும் இடத்தில் தரையிறங்கும் உலங்குவானூர்தியைத் தாக்கி அழிக்க வேண்டும். பல்வேறு சிரமங்களைத் தாண்டி குறித்த இடம்சென்று பகைவர்களுக்குள் ஓடிச்சென்று அவர்களுக்கு மத்தியில் நின்று அவர்களின் கண் முன்னால் தரையிறங்க முற்பட்ட உலங்கு வானூர்தியை வானில் வைத்தே ‘லோ’ உந்துகணையால் தாக்கியழித்து பயத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து நிற்கும் எதிரிகளின் மத்தியில் இவனும் ஏனைய வீரர்களும் தப்பிவந்த செயலானது கரும்புலித் தாக்குதல் வரலாற்றில் புதிய அத்தியாயமாகச் சேர்க்கப்பட்டது.

இடைக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வேவு எடுக்கப் பணிக்கப்பட்டான். அங்கு மக்களோடு மக்களாகவும் கரந்துறைந்திருக்கும் ‘கெரில்லா’ வீரனாகவும் செயற்பட்டு பல பெறுமதியான வேவுத் தகவல்களைச் சேகரித்திருந்தான். களங்களினுள் செல்லும்போது முன்னும் களம் விட்டகலும் போது இறுதியாகவும் வெளிவருவது இவனது இயல்பான பண்பு. இவன் தலைமையில் சேகரிக்கப்பட்ட தகவல்களுடன் வன்னித்தளம் திரும்புமாறு பணிக்கப்பட்டான். இவர்களுக்கென ஒரு சாதாரண மீன்பிடிப் படகு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதில் இவனும் அறிவுக்குமரனும் ஏற முற்படுகையில் சற்று நிதானித்தவன் அத்திட்டத்தைக் கைவிடுகின்றான். இவரும் ஒன்றாகப் போய் ஏதாவது நடந்தால் இவ்வளவு நாளும் கடினப்பட்டு சேகரித்த தகவல்கள் செல்லாக்காசு ஆகிவிடும். ஆதலால் அறிவுக்குமரனை முதலில் போகச்சொல்கின்றான். படகில் ஏறியவனிடம் இரண்டு கைக்குண்டுகளைக் கொடுத்து விடுகிறான். அந்த துர்ப்பாக்கிய நிகழ்வு நடந்தே விடுகின்றது. எதிரிப் படகுகள் அறிவுக்குமரனின் படகை வழிமறித்தன பகைவன் சோதனையிட முயற்சிக்கையில் அறிவுக்குமரன் குண்டுகளை வெடிக்கவைத்து தன்னையும் படகையும் அழித்துக் கொண்டான்.

பூட்டோ எடுத்த முடிவால் வேவுத்தகவல்கள் பத்திரமாக வன்னித்தளம் வந்து சேர்ந்தது. அவர்களின் கோட்பாட்டின்படி பூட்டோவின் தீர்மானமானது முற்றிலும் சரியானது எனினும் உணர்வு ரீதியாக பூட்டோவை இது பாதிக்கவே செய்தது. அறிவுக்குமரனுக்குப் பதிலாகத் தான் வந்திருக்கலாமோ என அடிக்கடி கூறிக்கொள்வான்.

‘கரும்புலிகளின்’ வளர்ச்சிப் போக்கில் இவனது பங்களிப்பின் காரணமாக கரும்புலிகள் சம்பந்தமான விதிமுறைகளை எழுதுவதிலும் அதனைப் பரீட்சிப்பதிலும் இயக்கம் இவனை ஈடுபடுத்தலானது. இவன் தனது நடைமுறைச் செயற்பாடுகளினூடாக கோட்பாடுகளை உருவாக்கினான். கரும்புலிகளுக்கான சத்தியப் பிரமாணம், பயிற்சிகள், ஒத்திகைகள், விதிமுறைகள் அடங்கிய மரபு சார் யாப்பை உருவாக்கப் பெரும் பங்களிப்பைச் செய்தான். இவனது தொடர் அனுபவமும் செயற்பாடும் காரணமாக கரும்புலிகளுக்கான இலக்கங்கள் ஒதுக்கப்படும்போது இவனுக்கு க.1 ஒதுக்கப்பட்டது. அன்று முதல் இவன் ‘நம்பர் வண்’ எனும் சங்கேத பாசையில் அழைக்கப்படலானான்.

பல்வேறு தரத்திலான போராளிகளுடனும் வயது வேறுபாடுடைய பொதுமக்களுடனும் இவன் பழகும் முறை வித்தியாசமானது. அந்தந்த வயதுக்காரர்களுடன் அவர்களின் குணாம்சங்களுடன் பழகினான். தனது அதிக ஓய்வு நேரங்களை சிறு குழந்தைகளுடனேயே செலவழித்தான். அவர்களுக்குச் சித்திரம் வரையப் பழக்குவதிலிருந்து பரீட்சைகளில் சித்தியடைய என்ன செய்யவேண்டும் என்பது வரை நடைமுறைச் சாத்தியமான வகையில் சொல்லிக்கொடுப்பான். எந்த நேரமும் இந்த நாட்டிற்காக வெடிக்கக் கூடிய கரும்புலி ஒருவனே தங்களுடன் பழகுகின்றான் என்பது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. எனினும் அதனை இவன் ஒருபோதும் ஒத்துணர்வைப் பெறுவதற்காகப் பயன்படுத்தியதே இல்லை.

ஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை தொடர் காவலரண்களைக் கடந்து உள்நுழைவது முடியாமல் போனது. உள் நிலைமைகளை அவதானித்து உட்புறமாகத் தாக்குதல் தொடுத்தால் மட்டுமே எதிரி குழப்பமடைவான். பலரால் இயலாமல் போகையில் மீண்டும் பூட்டோ தெரிவானான். கரும்புலிகளால் ஒரு முன்முயற்சி இயலாமல் போனது எனும் வார்த்தையை கேட்கவே அவன் விரும்பவில்லை. பொதிசெய்யப்பட்ட சிறு ஆயுதங்களுடனும், உணவுப் பொருட்களுடனும் கடலினுள் இறங்கினான். கரையோரமாக நீண்ட தூரம் நீந்திச் சென்றான். கடற்கரை பூராகவும் இராணுவமும், கடலில் கடற்படையும் அதியுசார் நிலையில் நின்றது. கடலினுள் பகைப் படகுகள் ரோந்து செய்தவண்ணம் இருந்தன. கரையேறுவதோ கடலில் ஆழம் செல்வதோ சாத்தியமற்றதானது. மீண்டும் தளம் திரும்புவதை அவன் கற்பனை கூடச் செய்யவில்லை. செய் அல்லது செத்துமடி என்பதுவே இவனது தாரக மந்திரமானது. சாதகமான சூழலுக்காகக் கடலில் மிதந்தபடியே காத்திருக்கலானான். பாரங்களைக் குறைப்பதற்காக உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் கழற்றி விடலானான். தொலைத்தொடர்பு சாதனமும் ‘G.P.S ம் குப்பியும் மட்டுமே அவனிடம் மிஞ்சியிருந்தது. இரண்டு நாட்களாக கடல் நீரில் மிதக்கலானான். பசியும், தாகமும், கடல் நீரின் உப்புச் செறிவும் அவனைச் சித்திரவதை செய்தது. தண்ணீரில் மிதந்தபடி தண்ணீர் இன்றித் தாகத்தால் தவித்தான். அவனையும் மீறி வெளிவந்த கண்ணீரைத் தண்ணீராகச் சுவைத்தான். தாயையும் தலைவனையும் நினைத்து நினைத்து தாங்குதிறனை வளர்த்து, யுகங்களாகும் கணங்களைக் கழித்தான்.
பூட்டோ தடயமின்றி வீரச்சாவடைந்து விட்டானோ எனப் பெரும்பாலானோர் கருதத்தொடங்கினர். ஒருவாறு எதிரி முகாமிற்குள் புகுந்து கொண்டான். புற்களில் நனைந்திருந்த பனி நீரை நாக்கால் நக்கி நாக்கிற்கு தண்ணீர் காட்டிக் கொண்டான். உட்சென்றவன் தொடர்பெடுத்து தான் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்தினான். அவன் கொடுத்த ஆள்கூற்றுத் தளங்கள் மீது எங்கள் ஆட்லறிகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. பத்திற்கு மேற்பட்ட ஆட்லறிகளும் பல பல்குழல் பீரங்கிகளும், ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான எறிகணைக் களஞ்சியங்களும் அழித்தொழிக்கப் பட்டன. உணவின்றி, ஆயுதமின்றி, பூஞ்சணம்பிடித்த பூசணிக்காயைத் துண்டுதுண்டாகச் சாப்பிட்டவாறு, உயிரையும் இயங்கு சக்தியையும் தக்க வைத்தவாறு பலநாள் பணி தொடர்ந்தான். தனியான இவன் பகைத்தளத்தினுள் கரும்புயலாகச் சுழன்றான். பெரும் படையணி புகுந்ததாக செயலாற்றி நாசம் ஏற்படுத்தினான்.

தொலைத் தொடர்பை இடை மறித்ததில் பூட்டோ தனியாகத்தான் செயற்படுகின்றான் என்பதை பகைவன் அறிந்து கொண்டான். இவனைப் பிடிப்பதற்கு பலநூறு இராணுவத்தினரையும் பல உந்துருளி அணிகளையும் களத்தில் இறக்கி களைத்துப் போனான் எதிரி. இறுதியாக இவனை மீட்டுவர இன்னொரு கரும்புலியணி உள்நுழைக்கப் பட்டது. அப்பிரதேசம் இவனுக்குத் தண்ணிபட்ட பாடாக இருந்ததால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இருபத்தியாறாம் நாள் இவன் வெளியில் வந்தான். மெலிந்து, நோய்வாய்ப்பட்டு சிறிதளவு திரவ ஊடகங்களைக் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு உதடுகளும் நாக்கும் வெடித்து, எலும்பும் தோலுமாக அவன் வெளிவந்த காட்சி காண்பவர் கண்களைக் கசிய வைத்து.

தொடர்ந்து நிமோனியாக் காய்ச்சலுக்கு உள்ளானான். சிலவாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டவன் மீண்டும் பணிக்கு ஆயத்தமாகினான். அக்காலப் பகுதியில் இவன் முள்ளியவளைப் பகுதியில் தங்கியிருப்பதை அறிந்து இவனது தாய் மகனைச் சந்திப்பதற்காக மன்னாரில் இருந்து பேருந்தில் வந்திறங்கினார். அங்கு தென்பட்ட பெண் போராளிகளிடம் பூட்டோ தங்கியிருக்கும் மருத்துவமுகாம் எதுவென கேட்க, “யாரு கரும்புலி பூட்டோவா?” என அவர்கள் கேட்டு முகாமிற்கு வழிகாட்டி விட்டனர். தாயும் மகனும் சந்தித்த அந்தக் கணங்கள் அவர்களுக்கே உரித்தானவை.

பலவருடங்களாக மகன் கரும்புலி என்பது தாயிற்குத் தெரியும். தாய்க்குத் தெரியும் என்பது மகனிற்கும் தெரியும். ஆயினும் இருவரும் ஒருபோதும் அதுபற்றிக் கதைத்தது இல்லை. மகன் தான்பட்ட கடினங்களைக் கவிதைகளாக எழுதியிருந்தான். அவற்றை வாசித்த அன்னையின் கண்கள் நீர் சொரிந்ததை அருகிருந்தவர்கள் பார்த்தார்கள்.

அடுத்த பணிக்காக இவன் தயாராகிக் கொண்டிருக்கையில் தலைவரிடம் இருந்து தகவல் வருகின்றது, உலங்குவானூர்தி தாக்குதல் சம்பவத்தைப் படமாக எடுக்கும்படி பணித்திருப்பதாகவும் அதில் அவன் செய்த பாத்திரத்தை இவனையே நடிக்கும் படியும். விடுதலைப்புலிகள் சொல்லுக்கு முந்திச் செயலை வைத்திருப்பவர்கள். செய்தவற்றையும் சொல்லாமல் விடுபவர்கள். இக்குணாம்சத்தினால் வரலாறு திரிந்து விடக்கூடாது என்பதற்காக தாக்குதல் செய்தவனையே அப்பாத்திரமாக நடிக்கச் சொன்னார்கள். வன்னிமண் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டிருந்த காலம். திரைப்படம் எடுப்பதற்கான போதிய வளங்கள் இல்லை. ஆயுத தளபாடங்களையும், துணைப்பாத்திரங்களுக்குத் தேவையான ஆளணிகளையும் இவனே ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை விரைவாக்கினான். படப்பிடிப்பின் நிமித்தம் பல்வேறு தரப்பினர்களுடனும் பழகவேண்டி ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறைவேறும் நிலையில் மீண்டுமொரு சிறு தவறு ஏற்பட்டது. உள்ளூர் முகவர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூட்டோ விளக்கம் கோரலுக்கு உள்ளாக்கப்பட்டான். பலர் எதிர்பார்த்ததற்கு மாறாக தேச நன்மைக்காக உருவாக்கப்பட்ட பொறி முறைக்கு ஒத்துழைப்பதையும் தனது கடமைகளில் ஒன்றென வெளிப்படுத்தினான். இவன் நடித்த திரைப்படம் “புயல் புகுந்த பூக்கள்” என வரலாற்றுப் பதிவானது. இக்காலப் பகுதியில் வெளிச்சம் பவள இதழில் இவனது உள் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சம்பவத்தை புயலவன் எனும் பெயரில் எழுதியிருந்தான்.
தொடர்ந்து தேசத்திற்கான இவன் பணி தியாகத்தின் உச்சம் நோக்கி வேக மெடுத்தது. மறைமுகக் கரும்புலியாகச் செயற்படத் தொடங்கினான். அரசியல் தெளிவும், இலட்சியப் பற்றும், செயல்திறனும், நிதானமும் உள்ள போராளியாக இவன் ஒளிவீசினான். இவனது பன்முகத்திறமை மறைமுகக் கரும்புலிகளை பலமடங்காகப் பலம்பெறச் செய்தது. இவனதுசிலவருடச் செயற்பாடுகள் வெளித்தெரிய முடியாதவையாகின. ஆனால் தமிழினம் அதனை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. சுதந்திர தமிழீழத்தின் பலமான அத்திவாரத்தினுள் இவனது உழைப்பு கலந்திருக்கின்றது. மாவிலாறைச் சாட்டாக வைத்து எதிரி யுத்தத்தைத் தொடங்கினான். முகமாலையைத் தாண்டி ஆனையிறவு நோக்கி எதிரி முன்னேறத் திட்டமிட்டிருக்கிறான். சம்பூர் மீது பெரும் இராணுவ அழுத்தத்தைப் பிரயோகிக்கின்றான். இராணுவத்தை திசைதிருப்பவும், குழப்பவும் அவசரமாக நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பலமுறை தலைவனுக்கு தடைநீக்கியாகச் செயற்பட்ட பூட்டோ இம்முறையும் முதல் தெரிவானான். தலைவருடனும், தளபதிகளுடனும் தொடர் சந்திப்புக்களை மேற்கொண்டான். ஓகஸ்ட் ஆரம்ப நாட்களில் ஒரு நாள் இரவு இரண்டு மணியளவில் தலைவரிடம் இறுதி விடை பெற்றுக்கொண்டான்.

மறைமுகக் கரும்புலி மீண்டும் தரைக் கரும்புலியாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசித்தான். பாரிய இராணுவத் திருப்புமுனைச் சாதனைகள் எதிர்பார்க்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் சில நாட்களில் செய்திவந்தது. “நம்பர் வண்” தொடர்பு இல்லை என. இம்முறையும் தப்பிவருவான் என அவனைத் தெரிந்த அனைவரும் நம்பியிருந்தனர். ஆனால் பூட்டோ வீரச்சாவு உறுதியான செய்தியுடன் 2006ஆம் ஆண்டு மாவீரர்தினம் கொண்டாடப்பட்டது.

ஒரு வேவுப்புலி நிபுணனை, வரைபடக் கலைஞனை, ஒரு கரும்புலிக் கவிஞனை, பாடலாசிரியனை, எழுத்தாளனை, நடிகனை, உச்சவினைத் திறனுடைய அப்பழுக்கற்ற செயல்வீரனை, போராளிகளுக்கான ஒரு உதாரண புருசனை, பட்டறிவால் உருவான போரியல் ஞானியை, எல்லாவற்றுக்கும் மேலாக தேசத்தையும், தலைவனையும் நேசித்த ஒரு “நம்பர் வண்” ஐ தமிழீழம் பௌதீக ரீதியாக இழந்து விட்டது. எனினும் தலைமுறைகள் கடந்து கடத்தப்படும் அவனது செயல் வீச்சுக்களின் விளைவாக சுதந்திர தமிழீழம் விடுதலை பெற்று, வளம்பெற்று தலைநிமிர்ந்து எங்கள் பெயர் சொல்லி வாழும்.



குறிப்பு :- இவனது செயற்பாடுகளில் சிலவற்றை மட்டும் இப்பகுதி கோடி காட்டுகின்றது. காலம் கைகொடுக்கையில் இவன் வீரகாவியமாக விரிவான்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி




கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி
துரைசிங்கம் புஸ்பகலா
மண்கும்பான் யாழ்ப்பாணம்







உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும்.நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.

“இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும்”

அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். சிறீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித்தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழவேரோடியிருக்க வேணும்.

தொடர்ந்தும் எமது மக்கள் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்தபோதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.

தான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத்தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

காங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலைகொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.

ஆறாயிரத்து முந்நூறு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.

கடற்புலிகள் மகளிர்படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.

ஆனால் வீட்டிலிருக்கும்வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.

லெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.

‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.

‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க்கோழி காக்கிறமாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’

என்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சாதனையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக்கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.

கரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவ வொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.

எல்லாம் தயார்.

கடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா? என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.

அங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.

இலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.

என்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.

1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிகளிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த இராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?

எல்லோருக்குமே பரபரப்பு.













தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் சிறீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது.

ஆர் பெத்த பிள்ளையோ? எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப்போகுதோ? என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.

‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.

சீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும்உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள்? என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ? ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய்? என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.

அங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.

ஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.

தீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் சிறீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்றபோது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப்போட்டுவிட்டது.

இந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்.

கேணல் ராஜு


கேணல் ராயு
அம்பலவாணன் நேமிநாதன்
யாழ்-மாவட்டம் சுன்னாகம்



மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே.



ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில் எத்தனையோ போராளிகள் தன்னலமற்ற ஆழமான தேசப்பற்றும் விடுதலை வேட்கையும் கொண்ட தனித்துவ மனிதர்களாக வாழ்ந்துள்ளனர். மானிட வாழ்வின் மெய்மையை தரிசித்த உன்னதமான தனித்துவமான இயல்புகளைக் கொண்டவர்களாகவும் ஆளுமை வீச்சுக் கொண்டவர்களாகவும் வாழ்ந்து தம்மை தேசவிடிவுக்காக அர்ப்பணித்துள்ளனர். இவ வரிசையில் கேணல் ராயு அவர்களின் வாழ்வு ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் ஓர் ஆழமான வரலாற்றுத்தடத்தை பதித்து நிற்கின்றது.



தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் இராணுவ நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து விடுதலையின் வெற்றிக்கு உழைத்த ஒரு மூத்த தளபதி.



விடுதலைப் போரில் சுமைகளைச் சுமந்ததொரு போரியல் ஆற்றலாளன், ஒரு தந்தைக்கே உரிய உரிமையுடனும் பாசத்துடனும் போராளிகளை வழிநடத்திய ஒரு போரியல் அறிவாளன், கேணல் ராயு என்கிற அம்பலவாணன் நேமிநாதன். இவர் யாழ்-மாவட்டம் சுன்னாகம் பகுதியில் திரு. திருமதி. அம்பலவாணன் தம்பதியினருக்கு மகனாய்ப்பிறந்தார்.



தமிழீழ மக்கள் சிங்கள இனவாதிகளின் அடக்குமுறைக்குள்ளான 1983 காலப்பகுதியில் அர்ப்பணிப்பும் ஆழமான விடுதலை வேட்கையும் கொண்ட கேணல் ராயு அவர்கள் தன்னை தமிழீழ விடுதலைப்போரில் இணைத்துக்கொண்டார். போராட்டம் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த காலங்களிலெல்லாம் தேசியத் தலைவருடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து விடுதலைப்போரில தன்னை முழுமையாக அர்ப்பணித்துக கொண்டவர



விடுதலைப்போரின் படையியல் வளர்ச்சியின் அம்சமாக மரபு ரீதியான போர் படையணிகள் உருவாக்கம் பெற்ற போது தலைவர் அவர்களின் நெறிப்படுத்தலில் விடுதலை இயக்கத்தின் முதலாவது சிறப்பு கொமாண்டோ படையணியை உருவாக்கிய இவர் மூன்றாம் கட்ட ஈழப்போரின் பின்னர் மாற்றமடைந்த போரியல் நுட்பங்களை ஈடுசெய்து புலிகள் மரபுப்படையாக எழுந்த போது, விடுதலைப்போரின் முதலாவது கனரக ஆட்டிலறி பீரங்கிப்படையின் உருவாக்கத்தையும், வெற்றிகரமாகத் தொடர்ந்து அதன் செயற்திறனை சாத்தியமாக்கினார்.







போர்க்களங்களில் வெளிப்பட்ட இவரது ஆளுமை வீச்சு, ஆட்டிலறி படைக்கலங்களின் துல்லியமான இயக்கம், ஒருங்கிணைப்பு போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய அசாத்திய திறமை நெருக்கடியான பல களங்களில் விடுதலைப் புலிகளுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தன.





விடுதலை இயக்கத்தின் இராணுவ அறிவியல் ரீதியான வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து, இயல்பாகவே இலத்திரனியல் பொறியியல் துறைகளில் திறமையும் ஆர்வமும் கொண்டு, விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றி படையியல் ரீதியான பல புதிய உருவாக்கங்களின் உந்து சக்தியாகத் திகழ்ந்து பல களங்களில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைப் பெற உறுதுணையாக இருந்து வழிநடத்திய இவர் 25ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2002ம் ஆண்டு மனித இனத்தின் கொடிய எதிரியான புற்றுநோய் காரணமாக வித்தாகிப்போனார்.





புற்றுநோய் தனது வேர்களை இவருள் பரப்பிய நேரத்திலும் சோர்வின்றி உடல் தளராது விடுதலைப் புலிகளுக்கு இராணுவ அறிவியற்துறையின் வளர்ச்சிக்காக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்தார். இறுதி வரை தமிழினத்தின் விடிவையும் தேசத்தையுமே சிந்தித்தார். அதற்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.

குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின்


வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது

- தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள்





இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் அப்துல்லா, ரகு, நளன், பழனி, மிரேஸ், றெஜினோல்ட், தவக்குமார், அன்பழகன், கரன், ஆனந்தக்குமார் ஆகியோரின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

1987ம் ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு இலங்கை – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது.

1987ம் ஆண்டு யூலை 29 ம் நாள் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே இலங்கை அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின. 1987ம் ஆண்டு அக்டோபர் 3 ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.

இலங்கை இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு அக்டோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி இலங்கை பேரினவாத அரசு திட்டம் தீட்டியது. பலாலி இராணுவ முகாமில் பன்னிரு வேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட இலங்கை அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை.

தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர். சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர்.

அதுவும் பயனற்றுப் போய்விட்டது. குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு அக்டோபர் 5 ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண் மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.

அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது. பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.

இன்று அங்கு அந்தப் பன்னிரு வேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட இலங்கை அரசின் சதி நடந்தேறி 22 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.

கந்தளாய் தமிழர் நிலத்தில் எழுந்த தமிழ் வீரன் மேஜர் கணேஷ்


தமிழ் மக்களின் சுதந்திரத்திற்க்கான ஆயுதப்போராட்டம் இன்று பலராலும் பலவகைகளில் விமர்சிக்கப்படுகின்றது .ஸ்ரீ லங்காவை ஆண்ட சிங்கள அரசுகளும் சிங்கள பேரினவாதிகளும்தமிழ் மக்களை ஒரு சுதந்திரமானகௌரவமான இனமாக கருதாமல் அவர்களை அடிமைகளாக இரண்டாம்தர பிரஜைகளாக நடாத்த முற்ப்பட்டதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது .

சிங்களத்தின் அடாவடித்தனங்களாலேயே நாங்கள் ஆயுதம் எந்த வற்புறுத்தப்பட்டோம் என்ற உண்மையை புலிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தி வந்தனர் .

புலிகளதும் தமிழ் மக்களதும் பக்க நியாயங்களை ஏற்க்க மறுத்த சிங்களமும் ,சர்வதேசமும் ஒன்றிணைந்து ஆயுதப்போரட்டத்தை இன்று பலமிழக்க செய்துள்ளனர் .

ஆயுதப்போராட்டம் இல்லாத நிலையில் தமிழ் மக்களிற்கு எதிராக சிங்களம் இன்று மேற்கொள்ளும் அடாவடிகள் போலத்தான் சுதந்திரத்திற்கு பிற்ப்பட்ட காலப்பகுதிகளிலும் சிங்களம் தமிழ் மக்களிற்கு எதிராக தனது அராஜகங்களை கட்டவிழ்த்து விட்டிருந்தது . இந்த அராஜகங்களை கண்டு பொறுக்கமுடியாமல் போராடப்புறப்பட்ட ஒரு புலி வீரன் தான் மேஜர் கணேஷ் .

தமிழ் மக்களிற்கு ஆயுதப்போரட்டத்தின் முலமே ஒரு கௌரவமான வாழ்வை இலங்கையில் அமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழீழ பிரதேசங்கள் எங்கும் போர்ப்பரணி பாடிய அத்தமிழ் வீரனின் 24ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் . அம் மாவீரனின் நினைவாக விடுதலைப்புலிகள் ஏட்டில்வெளிவந்த நினைவுக்குறிப்பு .

அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான் பெருத்த மீசை தடித்த உதடுகள் பருத்த மார்பு களத்தில் வெடித்த எரிமலையாய் உலா வந்தவன் கணேஷ் .

மூதூர் ஆறுகளால் துண்டுதுண்டாகி புவியியல் நிலையில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் நிலப்பரப்பு .கொலை வெறிச் சிங்களவரின் குடியேற்றப்பகுதி . இஸ்லாமியத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அவர்கள் வாழ்வையே சூறையாடும் முஸ்லிம் ஊர்காவல் வெறிப்படையின் இருண்ட கூடாரம். 9 இராணுவ முகாம்களாலும் 3 அதிரடி காவல் நிலையங்களாலும் வளைக்கப்பட்ட தமிழீழத்தி் முள் வேலிப்பகுதி.அங்கேதான் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வித்திட்டு வளர்த்தவன் கணேஷ் .

1981 ஆம் ஆண்டு தலைவர் பிரபாகரனைச் சந்தித்து புலிகள் இயக்கத்தில் சேர்ந்தபோது அவனுக்கு வயது 20 தான் .ஆனால் அப்போதே அவன் கண்களில் நெருப்பின் அலை பொங்கிற்று .

ஒன்றாய் படித்த காலத்தில் ஆசிர் சீலனோடு சேர்ந்து வளர்த்துக்கொண்ட விடுதலை உணர்வுகள் ஆழப் பதிந்திருந்தன . தளபதி சீலனுக்குப் பக்கத்தில் அவன் ஒரு வீரனாய் களத்தில் நின்ற காலம் உண்டு .

அந்த நாட்கள் கணேசின் வாழ்க்கையில் அவன் பாடம் கற்ற நாட்களாகும் .மீசாலை முற்றுகையில் தளபதி சீலன் மீளாத் துயில் கொண்ட நிகழ்ச்சி கணேஷ் நெஞ்சில் மின்னலின் கொடிய வீச்சாயிற்று .தன் பள்ளிக்கூட நண்பனின் அந்தப் பெரிய சாவை அவன் என்றும் மறந்ததில்லை .

நெல்லியடியில்தான் அவனுடைய முதல் களப்போர் 02 .07 .1982 அன்று ரோந்துப் போலிஸ் படையினரைச் சாகடித்து வீறு கொண்ட தன் போராட்ட வரலாற்றின் முதல் அத்தியாயத்தை எழுதினான் ஒப்பிலாத அந்த மாவீரன் தொடந்து கண்ட களங்கள் ஒன்றா? இரண்டா ?

சாவகச்சேரி போலீஸ் நிலையத் தாக்குதல் ,உமையாள்புரம் இராணுவ வாகனங்கள் மீதானஅதிரடி ,13 இராணுவ வெறியர்களை முதன்முறை பலிகொண்ட திருநெல்வேலி வரலாற்றுப்போர் , களுவாஞ்சிக்குடிபோலீஸ் நிலையத் தாக்குதல் ,திருக்கோவிலில் வைத்து துரோகி ஒருவன்மீதான துப்பாக்கிப் பிரயோகம் , ஈச்சலம்பத்தை முற்றுகை தகர்ப்பு ,கட்டைப்பறிச்சான் கண்ணிவெடித் தாக்குதல் ,பாலம்பட்டாறு இராணுவ மோதல், புலிகளின் வரலாற்றின் முதன்முதல் இராணுவத்தின் L .M .G வகைத் துப்பாக்கியை கைப்பற்றிய பட்டித்திடல் கவசவண்டித் தகர்ப்பு , இறால்குழி சுற்றிவளைப்பு மீறல்போர் ,3 ஆம் கொலனி இராணுவ நேரடிமோதல் ,வாகரை கண்ணிவெடி அதிரடித்தாக்குதல் , தெகிவத்தை போலிஸ் கொமாண்டோக்கள் கடத்திச்சென்று நடுக்காட்டில் வைத்து கற்பழிக்க முயன்ற தமிழ் பெண்களை மீட்டெடுத்த தீரப்போர் ,எமது விடுதலை வரலாற்றில் முதல்தடவை சிங்கள விமானப்படையின் கெலிகொப்டர் சுட்டு வீழ்த்திய கூனித்தீவு முற்றுகையுடைப்பு ,சம்பூர் யுத்தம் , வெருகல் விடுதலைப்புலிகளின் முகாம் வளைப்பு முயற்ச்சி முறியடிப்பு ஆம் …..

கணேஷ் புகழின் எல்லைகடந்த மாவீரன் தமிழீழத்தின் வடக்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான காரைநகர் தொடக்கம் தெற்கெல்லைக் கிராமங்களில் ஒன்றான திருக்கோவில் வரை களங்கள் பார்த்த கணேஷ்தமிழீழம் முழுவதையும் தன்இரண்டு கால்களால் அளந்தான் .யாழ்ப்பாணம் ,மன்னார் ,வவுனியா ,திருகோணமலை ,அம்பாறை என்று நீண்டு கிடந்த தமிழீழத்தை எத்தனை ஆறுகள் , உப்பேரிகள் ,கடல்நீரோடைகள் இடை நின்று பிரித்தலும் ஒற்றைப்பாலமாய்அத்தனை இடைவெளிகளிலும் நிரப்பித் தமிழீழத்தை இணைத்து நின்ற அவன் செயல் வடக்குக்கும் ,கிழக்குக்கும் வேலி போட நினைப்போருக்கு வரலாறு கொடுத்த சரியான அடியாகும் . கந்தளாய் என்னும் கிராமத்தில் எளிமையான குடும்பத்தில் பிறந்த கணேஷ் ஆடம்பரம் இல்லாதவனாய் எளிமையானவனாகவே கடைசிவரைவாழ்ந்தான் .

புலிகள் அவனை விரும்பினார்கள் என்று சொல்வதைவிட அவனைப்போலவே இருக்கவிரும்பினார்கள் என்பதே பொருத்தமானது . கூனித் தவின் அழகான உப்பாற்றுக்கரையில் புலிகள் அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ மகிழ பேசுவார்களே . வெருகல் மண்ணுக்குப் பச்சை வண்ணம் பூசும் வயல்களில் புலிகளின் கைகளைப்பற்றியபடியே சிரிக்கச் சிரிக்கப்பேசி அவன் உலா வருவானே ஓ ! அந்த நாட்கள் இனிமையானவை .

இஸ்லாமியர் ,இஸ்லாமியர் அல்லாதார் இடையே மதக்கலவரத்தை ஏற்படுத்தி தமிழினத்தைப் பிரிக்க சிங்கள ஆட்சியாளர் முனைத்த ஒரு சந்தர்ப்பத்தில் கலவரத்தை நிறுத்த மூதூர் நகருக்குப் பிரஜைகள் குழுவை அனுப்பினான்கணேஷ் . அக்குழுவை கூலிப்படையினர் கைது செய்தபோது போராடி அவர்களை அவன் மீட்ட களப்போர் இன்னுமொரு மயிர் சிலிர்க்கும் வரலாற்று நிகழ்வே. புலிகளுக்குப்பக்கத்தில் மட்டுமல்ல , மக்களுக்குப் பக்கத்திலும் அவன் நெருக்கமாகவே நின்றான்.

சாவுஅந்தமாவீரனைச் சந்தித்த நாள் கொடுமையானது .திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரியபாலம் என்ற இடத்தில் 05 .11 .1986அன்று 4 மணியளவில் நிகழ்ந்த இராணுவத்தின் சுற்றிவளைப்பி் மேஜர் கணேஷ் நெருப்பின் நடுவில் 5 ஆண்டுகள் நின்று விளையாடிய விடுதலைபுலி நேர்நின்ற எதிரிகளை மோதி நிமிர்ந்த தலையோடு மரணத்தை ஏற்றுக்கொண்டான்

அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான்

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனி



நல்லையா அமிர்தலிங்கம்
முல்லைத்தீவு
வீரமரணம் 08/11/1987

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)


தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை வளர்த்த பெருமை மேஜர் பசீலனை சாரும் அந்தவகையில்தான் ‘பசீலன் அண்ணைதான் தனக்கு சண்டைபழக்கியவர் என்று பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் அடிக்கடி தனது பேச்சுக்களில் சொல்வார்”அந்த அளவிற்கு சிறப்பான சண்டைவீரனாக அன்று பசீலன் காணப்பட்டான்.



ஒரு கெரில்லா போராளியாக செயற்பட்டுபின்னர் வன்னிமாவட்ட படைத்தளபதியாக திகழ்ந்த பசீலன் வன்னியில்படையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களிலும் சிறப்புற செயற்பட்டான். யாழ்ப்பாணத்தில் கோப்பாய்பகுதியில் இந்திய அமைதிப்படையினருக்கு திரான தாக்குதல் நடத்தி ராங்கிகளை சேதமடைய செய்தான் அதேபொல் ஒட்டிசுட்டான் முதன்மை வீதியில் கூளாமுறிப்பிற்கு அருகில் ஒர் இடத்தில் இந்திய அமைதிப்படையினரின் ராங்கிகள் மீதுதாக்கதல் நடத்தி இழப்பினை ஏற்படுத்தினான் இவ்வாறு பலதாக்கதல்களை தொடுத்தஇவன் தமிழீழ தேசியத்தலைவர்அவர்களை வன்னிக்கு அழைத்துவருவதாற்கான பொறுப்பினை ஏற்று மேஜர் பசீலன்.,பிரிகேடியர் பால்றாஜ்,லெப்ரினன் கேணல் நவம்,உள்ளிட்டவர்கள் வன்னியின் சிறந்த தாக்குதல் வீரர்களாக அன்று காணப்படுகின்றார்கள் அன்று பசீலனின் அணியின் பொறுப்பில்தான் தலைவர் அவர்கள் மணலாற்றுக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படுகின்றார் இதன்பின்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தாக்குதல்களை தொடுத்த இவன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பசீலன் என்றால் பயம் வரும் அளவிற்கு இந்திய அமைதிப்படையினருக்கு கலக்கத்ததை ஏற்படுத்தினான் முல்லைத்தீவு பகுதியில் இந்தியப்படையினருடன் சண்டைநடத்திக்கொண்டிருந்த வேளை 08.11.1987 அன்று எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத்தளுவிக்கொண்டுள்ளார்.

பின்னர் பசீலனின் நினைவாக பசீலன் பயிற்சிபாசறை பசீலன்- 2000 என்று விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட பீரங்கி என்பன பசீலனின் வரலாற்றை சொல்லி நிக்கின்றன.



சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

சிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள்.

ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி ࠯க்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம்.

சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன்.

உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன்.

தமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை.

இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள்.

மேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது.


இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது.

எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார்.

போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார்.

எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார்.


கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை.
ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார்.

கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது.

எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம்.

துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ்.

தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன்.

இன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன்.

கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான்.

ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான்.

தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன்.

கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.87 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான்.

தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்….. மேஜர் பசிலன் அண்ணன் .

லெப்.கேணல் மல்லி


17.11.1994 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் மல்லி(அமுதன்)

சிறிலங்காவில் சந்திரிகா தலைமையில் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் நல்லெண்ண நடவடிக்கையாக அறிவித்த தன்னிச்சையான போர்நிறுத்த காலப்பகுதியிலேயே சிறிலங்கா படையினரால் லெப்.கேணல் மல்லி மீதான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

லெப்.கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன்.



இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.

இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்தில் முகாம் அமைக்க முற்பட்ட வேளையில் தேசத்துரோகிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்டான்.

1991களில் கொக்காவில், முல்லைத்தீவு, மாங்குளம் என தொடர்ந்து வீழ்ந்த இராணுவ முகாம்களின் தாக்குதல்களில் முன்நின்றான்.

1991 ஆ.க.வெ என விடுதலைப் புலிகளால் பெயர் சூட்டப்பட்டு நடாத்தப்பட்ட ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல்களிலும் 1992ல் வண்ணாங்குள முகாம் தாக்குதல்களிலும் 1993ல் பூநகரி முகாம் தாக்குதல்களிலும் புயலென நின்றான். 1990ம் ஆண்டு மாங்குள முகாமிலிருந்து மல்லாவிப் பக்கமாக முன்னேற முயன்ற இராணுத்தினருடன் நேரடி மோதலில் நின்றான்.

சிலாவத்துறையில் இருந்து அளம்பில் நோக்கி முன்னேற முயன்ற இராணுவத்தினருடனான நேரடி மோதலில் குதித்தான்.

யாழ்தேவி எனப் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை அது. கட்டைக்காட்டிலிருந்து புலோப்பளையை நோக்கி முன்னேற முயன்ற யாழ்தேவியை தடம்புரள வைத்தான். அன்பும் பண்பும் அகத்திருத்திய மனிதரைச் சுமந்து யாழ்தேவி வரின் வரலாமேயன்றி ஆக்கிரமிப்பு எண்ணங்கொண்டு எவரும் வருதல் இயலாது என்று எதிர் நின்றான். தாயை தாய்த் தேசத்தை தன் உயிரினும் மேலாகப் பூசிக்கின்றவன். போர் என்றால் நெஞ்சம் பூரித்து தோள்கள் வலுவுற நிமிர்ந்து நடந்தவன். எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன்.

தேசியதலைவரின் சிந்தனைகள்

"நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள். நாடு நமக்குப் பெரிதானால் நாம் எல்லோரும் அதற்குச் சிறியவர்களே, எமது நிலையற்ற வாழ்விலும் பார்க்க நாட்டின் வாழ்வே பெரிது"